பிரபலங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: யூசுப் பதானுக்கு கோர்ட் அட்வைஸ்
பிரபலங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: யூசுப் பதானுக்கு கோர்ட் அட்வைஸ்
UPDATED : செப் 17, 2025 06:25 AM
ADDED : செப் 17, 2025 02:57 AM

காந்தி நகர் : 'பிரபலங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல' எனக் குறிப்பிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணமுல் காங்., - எம்.பி.,யுமான யூசுப் பதானை, 'ஆக்கிரமிப்பாளர்' என்றும் அறிவித்தது.
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யூசுப் பதான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இவர், மேற்கு வங்கத்தின் பஹராம்பூர் தொகுதி லோக்சபா எம்.பி.,யாகவும் பதவி வகிக்கிறார்.
வதோதரா மாவட்டத்தின் தண்டல்ஜா என்ற பகுதியில், யூசுப் பதானுக்கு சொந்தமாக வீடு உள்ளது. இதையொட்டிய அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து அவர் பயன்படுத்தி வருகிறார். நிலத்தை காலி செய்து ஒப்படைக்கும்படி, 2012ல், யூசுப் பதானுக்கு வதோதரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், 'நானும், என் சகோதரர் இர்பான் பதானும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்.
'எனவே, குடும்பத்தின் பாதுகாப்பை கருதி சர்ச்சைக்குரிய நிலத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். அதற்குரிய பணத்தை செலுத்த தயாராக இருக்கிறேன்' என, குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மோனா பட் பிறப்பித்த உத்தரவு:
எம்.பி., மற்றும் பிரபலம் என்ற அடிப்படையில், சட்டத்தை மதித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியது, யூசுப் பதானின் பொறுப்பு. ஆனால், அவரே சட்டத்தை மீறி உள்ளதை ஏற்க முடியாது. பிரபலங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அனைவரும் சட்டத்துக்கு முன் சமம்.
அத்தகைய நபர்களுக்கு சலுகை அளிப்பது சமூகத்திற்கு தவறான செய்தியை அனுப்புகிறது மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். அரசு நிலத்தை ஆக்கிரமித்த யூசுப் பதான், ஒரு சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்.
அவரிடம் இருந்து ஆக்கிர மிப்பு நிலத்தை வதோதரா மாநகராட்சி உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.