ஜாதி வாரி கணக்கெடுப்பு; மத்திய அரசுக்கு உதவ தயார் : ராகுல் பேட்டி
ஜாதி வாரி கணக்கெடுப்பு; மத்திய அரசுக்கு உதவ தயார் : ராகுல் பேட்டி
UPDATED : ஏப் 30, 2025 10:15 PM
ADDED : ஏப் 30, 2025 08:38 PM

புதுடில்லி: '' ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான திட்டத்தை வடிவமைக்க உதவ தயாராக உள்ளோம்,'' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
புரியவில்லை
புதுடில்லியில் நிருபர்களைச் சந்தித்த ராகுல் கூறியதாவது: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த செய்வோம் என பார்லிமென்டில் நாங்கள் தெரிவித்து இருந்தோம். இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் என செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள சுவற்றை அகற்றுவோம் எனக்கூறி இருந்தோம். நான்கு ஜாதிகள் மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி கூறி வந்த நிலையில், 11 ஆண்டுக்கு பிறகு அறிவிப்புக்கு பின்னால் என்ன உள்ளது என புரியவில்லை.
வித்தியாசம்
அதனை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், அதற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். எப்போது நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இது முதல் நடவடிக்கை. ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா மாநிலம் முன்மாதிரியாக உள்ளது. அதற்கான விரிவானதிட்டம் அம்மாநிலத்திடம் உள்ளது. ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான திட்டத்தை தயாரிக்க நாங்கள் உதவ தயாராக உள்ளோம். பீஹார் மற்றும் தெலுங்கானா ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நிறைய வித்தியாசம் உள்ளது.
விடையில்லை
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது. ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும்படி பல முறை மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளேன். ஜாதிவாரி கணக்கெடுப்பில் பல கேள்விகளுக்கு விடையளிக்கப்படவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது முதல்படி. ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் புதிய வளர்ச்சி திட்டத்தை கொண்டு வருவதே எங்களின் கொள்கை ஆகும். இட ஒதுக்கீடு மட்டும் அல்லாமல் மத்திய அரசிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.
தனியார் கல்வி நிறுவனங்களில்
ஓபிசி, தலித்கள், ஆதிவாசிகள் ஆகியோர் நாட்டிற்கு அளித்த பங்களிப்பு என்ன?ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், அதனை தாண்டி காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியதை மீண்டும் கூற விரும்புகிறேன். தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 15(5). இது ஏற்கனவே சட்டமாகி உள்ளது. இதனை எப்போது பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு எப்போது செயல்படுத்தும் என தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

