அரசு நிலத்தை ஆக்கிரமித்து விடுதி கட்டியவர்கள் மீது வழக்கு
அரசு நிலத்தை ஆக்கிரமித்து விடுதி கட்டியவர்கள் மீது வழக்கு
ADDED : நவ 28, 2024 11:58 PM
கொப்பால்; கொப்பால் அருகே, அரசு நிலத்தை ஆக்கிரமித்து சொகுசு விடுதி கட்டிய உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, மண்டல கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கலெக்டருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கொப்பால் அருகே உள்ள நாராயணபேட், ராமராஜபேட் கிராமங்களில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மூன்று சொகுசு விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன.
இதுகுறித்து ஒரு சமூக ஆர்வலர், கொப்பால் கலெக்டராக இருந்த சுந்தரேஸ் பாபுவிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து, அறிக்கை அளிக்க வருவாய் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், சுந்தரேஷ் பாபு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வருவாய் அதிகாரிகள் விசாரணை நடத்தி, தற்போதைய கொப்பால் கலெக்டர் நளின் அதுலிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், மூன்று சொகுசு விடுதிகளும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது தெரியவந்தது. இதனால் சொகுசு விடுதிகளை அகற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் திடீரென, தான் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
இதுகுறித்து பெங்களூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு அதிகாரிகளிடமும், கலபுரகி மண்டல சிறப்பு கமிஷனரிடமும் சமூக ஆர்வலர் மனு அளித்தார்.
இந்நிலையில், கலபுரகி மண்டல கமிஷனர் நடத்திய விசாரணையில், மூன்று சொகுசு விடுதிகளும் அரசு நிலத்தை ஆக்கிரமித்தது தெரிய வந்ததால், அதை உடனடியாக காலி செய்யும்படி கலெக்டருக்கு, மண்டல கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
முதலில் சொகுசு விடுதிகளை அகற்றுமாறு கூறிவிட்டு, பின்னர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் என்று விளக்கம் அளிக்கும்படி கலெக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

