ADDED : டிச 13, 2024 11:05 PM

கீரை என்றாலே சிறுவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவர். நாம் வேண்டாம் என்ற ஒதுக்கும் விஷயங்களில், எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. கீரைகளில் வைட்டமின்கள், நார் சத்துகள் அதிகம் இருப்பதால், உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.
கீரையை சாப்பிட குழந்தைகள் மறுக்கின்றனர் என்றால், எப்போதாவது தான் கீரைகளை செய்வோம். இன்று நீங்கள் கற்கும் ரெசிப்பியை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். கீரை வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவர்.
செய்முறை
▶ குடை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
▶ பின்னர் பாலக்கீரையை பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
▶ கீரை ஆறியவுடன், அதனுடன் முந்திரி, பன்னீர் சேர்த்து, மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
▶ அரை கப் பாஸ்தாவை, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். குறிப்பாக, குழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் சுவை இருக்காது.
▶ ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
▶ பூண்டு வதங்கிய உடன், வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து, சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
▶ சுவையை அதிகரிக்க வேண்டும் என்றால், அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
▶ காரம் தேவையென்றால், சிறிதளவு மிளகாய் துாள், உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன், வேகவைத்து அரைத்த பாலக்கீரை விழுதை சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
▶ எல்லாவற்றையும் சேர்த்து சிறிது வேக வைத்து எடுத்தால், சுவையுடன் புரதம் நிறைந்த 'கீரை பாஸ்தா' ரெடி.
▶ பாலக்கீரை தான் சேர்க்க வேண்டும் என்று அவசியமில்லை. கசப்புத்தன்மை குறைவாக உள்ள கீரைகளை வைத்தும் சமைக்கலாம். சுவைக்காக தான், சீஸ் சேர்க்கிறோம் என்பதால் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள்
- நமது நிருபர் -.

