மும்பை - ஆமதாபாத் வழித்தடத்தில் 2027 டிச., முதல் 'புல்லட் ரயில்' சேவை
மும்பை - ஆமதாபாத் வழித்தடத்தில் 2027 டிச., முதல் 'புல்லட் ரயில்' சேவை
ADDED : செப் 21, 2025 01:23 AM

மும்பை: “மும்பை - ஆமதாபாத் வழித்தடத்தில் சூரத் - பிலிமோரா இடையிலான முதற்கட்ட 'புல்லட் ரயில்' சேவை 2027, டிசம்பரில் துவங்கும்,” என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் வரை, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டதை அடுத்து, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய இந்த அதிவேக ரயில் சேவை ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 1.08 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் தயாராகி வருகிறது.
இந்த அதிவேக ரயில், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் இருந்து புறப்பட்டு, குஜராத்தின் வாபி, சூரத், ஆனந்த், வதோதரா, ஆமதாபாத் நகரங்களை இணைக்க உள்ளது. இதுவரை 321 கி.மீ., துாரத்துக்கான பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், ரயில் செல்வதற்கான சுரங்கம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
பாந்த்ரா குர்லா வளாகம் மற்றும் ஷில்பாட்டா இடையில் 21 கி.மீ., துாரம் சுரங்கப் பாதை அமைக்கும் பணியை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார்.
மும்பை அருகே கன்சோலியில், கடைசி 5 கி.மீ., துாரத்துக்கான சுரங்கப் பாதை துளையிடும் பணி நேற்று நிறைவடைந்தது. இதை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிறைவு செய்து வைத்தார்.
பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நம் நாட்டில், அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில் சேவை, 2027, டிசம்பரில் துவங்கும். முதற்கட்டமாக சூரத் - பிலிமோரா இடையில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது, 2028ல் தானேவையும், 2029ல் பாந்த்ரா குர்லா வளாகத்தையும் இணைக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்கான போக்குவரத்தாக இருக்கும் புல்லட் ரயில் சேவையின் கட்டணம் குறைவாகவே இருக்கும்.
மும்பை - ஆமதாபாத் இடையிலான பயண துாரம் ஒன்பது மணி நேரமாக இருக்கும் நிலையில், புல்லட் ரயில் சேவை அதை 2 மணி நேரம் 7 நிமிடங்களாக குறைக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு ரயில் புறப்படும் வகையில் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முழு வலையமைப்பும் நிறைவு பெற்றவுடன், அலுவலக நேரங்களில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இருக்கும். மும்பை மற்றும் ஆமதாபாத் இடையேயான பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை; பயணியர் ரயில் நிலையத்திற்கு வந்து ஏறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.