திருவனந்தபுரம் மேயராக பா.ஜ., ராஜேஷ் பதவியேற்பு; இடதுசாரி கோட்டையை தகர்த்து சாதனை
திருவனந்தபுரம் மேயராக பா.ஜ., ராஜேஷ் பதவியேற்பு; இடதுசாரி கோட்டையை தகர்த்து சாதனை
ADDED : டிச 27, 2025 12:15 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக, பா.ஜ., கவுன்சிலர் வி.வி.ராஜேஷ், 45, தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 99 கவுன்சிலர்களில், 51 பேர் அவருக்கு ஓட்டளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் மேயராக நேற்று பதவியேற்றார்.
கேரளாவில், மார்க். கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில், ஆறு மாநகராட்சிகள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.
இதில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நான்கு மாநகராட்சிகள் உட்பட பெரும்பாலான நகராட்சிகளை கைப்பற்றியது. ஆளும் இடது ஜனநாயக முன்னணி, ஒரேயொரு மாநகராட்சியை மட்டுமே கைப்பற்றியது. மேலும், குறைந்த நகராட்சிகளையே வென்றது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் இடது ஜனநாயக முன்னணி கோட்டையாக திகழ்ந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை, முதன்முறையாக பா.ஜ., கைப்பற்றி சாதித்தது. மொத்தமுள்ள 101 வார்டுகளில், ஒரு வார்டில் தேர்தல் நடக்கவில்லை. 100 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில், 50 வார்டுகளை பா.ஜ., கைப்பற்றியது.
இதையடுத்து, திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக, கொடுங்கனுார் வார்டு கவுன்சிலரும், மாநில பா.ஜ., செயலருமான வி.வி.ராஜேஷை அக்கட்சி அறிவித்தது.
ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில், கே.எஸ் .சபரிநாதன்; இடது ஜனநாயக முன்னணி சார்பில் ஆர்.பி.சிவாஜி ஆகியோர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயருக்கான தேர்தல் நடந்தது. இதில், 50 பா.ஜ., கவுன்சிலர்கள் உட்பட, மொத்தம் 99 பேர் ஓட்டளித்தனர்; ஒரு சுயேச்சை கவுன்சிலர் ஓட்டளிக்கவில்லை. பா.ஜ., கவுன்சிலர் வி.வி.ராஜேஷ், 51 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். ஆர்.பி.சிவாஜி - 29; கே.எஸ்.சபரிநாதன் 19 ஓட்டுகளை பெற்றனர்.
இதையடுத்து, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக, வி.வி.ராஜேஷ் முறைப்படி பதவியேற்றார். அடுத்தாண்டு ஏப்ரலில் தமிழகத்துடன் சேர்த்து கேரளாவுக்கும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.,வின் இந்த வளர்ச்சி அக்கட்சி நிர்வாகிகளிடையே நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் விதைத்துள்ளது.

