தனி மாநிலமாக வட கர்நாடகா பா.ஜ., - எம்.எல்.ஏ., எச்சரிக்கை
தனி மாநிலமாக வட கர்நாடகா பா.ஜ., - எம்.எல்.ஏ., எச்சரிக்கை
ADDED : டிச 17, 2024 05:02 AM

பெலகாவி: ''தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டால் வட கர்நாடகாவை தனி மாநிலமாக்கும் குரல் ஒலிக்கும்,'' என்று, பா.ஜ., உறுப்பினர் சித்து சவதி, அரசை எச்சரித்து உள்ளார்.
கர்நாடக சட்டசபையில் வடகர்நாடக பிரச்னை குறித்த விவாதத்தில் அவர் பேசியாவது:
பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள அலமாட்டி அணையை உயர்த்துவது, கிருஷ்ணா மேலணை திட்டம் குறித்த விவாதம், அடிக்கடி நடக்கிறது. அணை கட்டுவதற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு, உரிய தொகை வழங்கப்படுவது இல்லை. வடகர்நாடக பகுதிகள் அனைத்து அரசுகளாலும் புறக்கணிக்கப்படுகிறது.
காவிரி நதிநீர் திட்ட பணிகளுக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைத்து உள்ளது. ஆனால் கிருஷ்ணா நதிநீர் பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. இதற்கு எங்களிடம் ஒற்றுமை இல்லாதது காரணம். பாகல்கோட், விஜயபுரா மாவட்ட மக்கள் தினமும் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
கரும்பு விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். கரும்புகளை எடை போடுவதில், தொழிற்சாலைகள் மோசடி செய்கின்றன. அத்தகைய தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். வடகர்நாடகாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்று, குரல் ஒலிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

