ADDED : பிப் 21, 2024 06:45 AM
பெங்களூரு : லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் ஏழு தொகுதி வேட்பாளர்கள் தேர்வில், பா.ஜ., திணறி வருகிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு இம்மாத இறுதி அல்லது, அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் லோக்சபா தேர்தலுக்காக ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜ., - ம.ஜ.த., தயாராகி வருகின்றனர்.
வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென, அக்கட்சிகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஏழு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய, பா.ஜ., திணறி வருகிறது. அந்த தொகுதிகள் தாவணகெரே, பீதர், ஹாவேரி, மைசூரு, பெங்களூரு வடக்கு, மாண்டியா, சித்ரதுர்கா ஆகியவை.
l தாவணகெரே எம்.பி.,யாக உள்ள சித்தேஸ்வருக்கு, 'சீட்' வழங்க கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது
l பீதர் எம்.பி.,யான மத்திய அமைச்சர் பகவந்த் கூபாவுக்கு, 'சீட்' தர கூடாது என்று, மாநில தலைவர் விஜயேந்திரா காலில் விழுந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் பரபரப்பை ஏற்படுத்தினார்
l ஹாவேரி தொகுதியில் தொடர்ந்து 3 முறை வென்ற, சிவகுமார் உதாசி தேர்தல் அரசியலில் இருந்து, ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அந்த தொகுதிக்கு இதுவரை சரியான வேட்பாளர் கிடைக்கவில்லை. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் பெயர் அடிபட்டாலும், உறுதியான தகவல் இல்லை
l மைசூரு எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு வாய்ப்பு கொடுக்க, கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது
l பெங்களூரு வடக்கில் தற்போதைய எம்.பி., சதானந்த கவுடாவுக்கு பதில், இன்னொருவரை தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது
l மாண்டியாவில் 'சீட்' கேட்டு சுமலதா அடம்பிடிக்கிறார்
l சித்ரதுர்கா எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான நாராயணசாமிக்கு தேசிய அரசியலில் விருப்பம் இல்லை.
மேற்கண்ட காரணங்களாலும், 'சீட்' கேட்டு இளம் தலைவர்கள் அழுத்தம் கொடுப்பதாலும், இந்த ஏழு தொகுதிகளுக்கும், வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல், பா.ஜ., திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

