'ஹிஜாப்' அணிந்த டாக்டரின் முகத்தை திறந்து பார்த்த பீஹார் முதல்வர் நிதிஷ்
'ஹிஜாப்' அணிந்த டாக்டரின் முகத்தை திறந்து பார்த்த பீஹார் முதல்வர் நிதிஷ்
ADDED : டிச 16, 2025 12:33 AM

பாட்னா: பீஹாரில், ஆயுஷ் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், 'ஹிஜாப்' அணிந்த பெண் டாக்டர் ஒருவரின் முகத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் திறந்து பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தலைநகர் பாட்னாவில், 1,000க்கும் மேற்பட்ட ஆயுஷ் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
அப்போது, நுஸ்ரத் பர்வீன் என்ற பெண் டாக்டர், ஹிஜாப் எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்தபடி பணி நியமன ஆணையை பெற வந்தார். பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர் நிதிஷ் குமார், அவர் அணிந்திருந்த ஹிஜாப்பை திறந்து பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 75 வயதாகும் முதல்வர் நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

