ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை: பிரதமர் உறுதி
ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை: பிரதமர் உறுதி
UPDATED : ஏப் 02, 2024 05:57 PM
ADDED : ஏப் 02, 2024 01:59 PM

ருத்ரபூர்: ‛‛ பா.ஜ.,வின் 3வது ஆட்சி காலத்தில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும்''. என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ், நாட்டை பற்ற வைக்கும் வகையில் பேசி வருகிறது. அக்கட்சியை நீங்கள் தான் தண்டிக்க வேண்டும். இம்முறை அவர்களை களத்தில் இருக்க விடாதீர்கள். ஜனநாயகத்தின் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. குழப்பம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு நாட்டை தள்ள காங்கிரஸ் விரும்புகிறது.
நாட்டை இரண்டாக பிரிப்பது பற்றி கர்நாடக காங்கிரஸ் தலைவர் பேசி உள்ளார். நாட்டை பிரிக்க நினைக்கும் அக்கட்சி தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? ஆனால், காங்கிரஸ் அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் அளித்து உள்ளது.
பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. ஊழல்வாதிகளை ஒரு போதும் விட மாட்டேன். 3வது ஆட்சிகாலத்தில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே பிறந்துள்ளேன்.
ஊழல்வாதிகள் சிறைக்கு செல்ல வேண்டாமா. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு என்னை விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

