வங்கி மோசடி வழக்கு: நரேஷ் கோயலுக்கு ஜாமின் மறுப்பு
வங்கி மோசடி வழக்கு: நரேஷ் கோயலுக்கு ஜாமின் மறுப்பு
ADDED : ஏப் 10, 2024 11:12 PM

புதுடில்லி: ரூ. 538 கோடி வங்கி மோசடியில் கைதாகியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு ஜாமின் வழங்க சிறப்பு கோர்ட் மறுத்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் 75, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 538 கோடி கடன் பெற்று திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து அமலாக்கத்துறை நரேஷ் கோயல் மீது பண மோசடி தடுப்புப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இதில் 2023 செப்டம்பரில் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நரேஷ் கோயலுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை காரணம் காட்டி மேல் சிகிச்சைக்காக ஜாமின் கோரி நரேஷ் கோயல் சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது. மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட் நீதிபதி எம்.ஜி. தேஷ் பாண்டே ஜாமின் வழங்க மறுத்தார்.

