'பிரதமரின் கதி சக்தி' திட்டத்தில் அயோத்தி புறவழிச்சாலை அமைப்பு
'பிரதமரின் கதி சக்தி' திட்டத்தில் அயோத்தி புறவழிச்சாலை அமைப்பு
ADDED : ஜன 27, 2024 06:05 AM

புதுடில்லி : 'உத்தர பிரதேசத்தில் 'பிரதமரின் கதி சக்தி' திட்டத்தின் கீழ் அயோத்தியில் 67.57 கி.மீ. துார புறவழிச்சாலை திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது' என மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உட்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை ஒருங்கிணைப்பதே 'கதி சக்தி' திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி 16 மத்திய அமைச்சகங்களின் செயல்பாடுகள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் தளவாடச் செலவுகள் குறைகின்றன.
இந்நிலையில் உ.பி.யில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள அயோத்தியில் கதி சக்தி திட்டத்தின் கீழ் 67.57 கி.மீ. துார புறவழிச்சாலை கட்டப் பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கதி சக்தி திட்டத்தின் கீழ் அயோத்தியில் 67.57 கி.மீ. துார புறவழிச்சாலை செயல்படுத்தப்பட்டு உள்ளது. லக்னோ பஸ்தி கோண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம் இந்த மாவட்டங்களில் சுற்றுலா ஆன்மிக தலங்கள் உட்பட பொருளாதார சமூக மற்றும் தளவாட முனைகளின் இணைப்பை மேம்படுத்த உதவும்.
லக்னோ - கோரக்பூர் பொருளாதார மையங்களுக்கு இடையே அயோத்தி அமைந்துள்ளதால் தோல் கட்டுமானப் பொருட்கள் இரும்பு எக்கு போன்ற முக்கிய பொருட்கள் அதன் வழியாக செல்கின்றன. தற்போது இந்த புறவழிச்சாலை தடையின்றி சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

