ADDED : பிப் 28, 2024 12:52 AM
இடுக்கி, கேரளாவின் மூணாறு அருகே, காட்டு யானை தாக்கியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
கேரளாவின் வயநாட்டில், காட்டு யானை தாக்கியதில் இரண்டு பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். வனவிலங்குகள் - மனிதர்கள் இடையிலான மோதல்கள் தொடர்வது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஆய்வு நடத்தி தீர்வு காணப்படும் என, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள கன்னிமலா எஸ்டேட் பகுதியில், காட்டு யானை தாக்கியதில் ஆட்டோ டிரைவர் சுரேஷ் குமார், 44, என்பவர் உயிரிழந்தார்.
ஆட்டோவில் இருந்த ஒரு பெண் மற்றும் பள்ளி செல்லும் அவரது மகள், நுாலிழையில் உயிர் தப்பினர்.
சம்பவம் நடந்த நேற்று முன்தினம் இரவு, ரஜீனா என்ற பெண், அவரது கணவர் மற்றும் பள்ளி செல்லும் மகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு டிரைவர் சுரேஷ் குமார் சென்றார்.
இவர்களை தவிர இரு வெளி மாநில தொழிலாளர்களும் அந்த ஆட்டோவில் பயணித்தனர். அவர்கள் சென்ற வழியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. ஆட்டோவை நெருங்கி வந்து தாக்கியதில் ஆட்டோ பக்கவாட்டில் கவிழ்ந்தது.
அதில் இருந்து டிரைவர் சுரேஷ் குமார் வெளியேற முயற்சித்த போது, யானை அவரை துாக்கி வீசி கொன்றது.
பெண் மற்றும் அவரது மகள் உட்பட பிற பயணியர் ஆட்டோவில் இருந்து வெளியேறாமல் இருந்ததால் உயிர் பிழைத்தனர்.
அந்த வழியாக ஜீப்பில் வந்த சிலர், ஆட்டோவில் இருந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் மூணாறு பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் குமார் குடும்பத்தினருக்கு, மாநில அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை உடனடியாக நேற்று வழங்கியது.
அவரது குழந்தையின் படிப்பு செலவை மாநில அரசு ஏற்கும் என, ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

