ADDED : மார் 12, 2024 03:30 AM
தட்சிண கன்னடா: போக்குவரத்து விதிமீறியதற்காக அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரின் வாகனத்துக்கு ஆட்டோ ஓட்டுனர் தீவைக்க முயற்சித்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரை சேர்ந்தவர் முகமது அன்சார், 30. ஆட்டோ டிரைவரான இவர், நேற்று காலை பன்ட்வாலின் பி.சி., சாலையில், ஆட்டோ ஓட்டும்போது மொபைல் போனில் பேசியபடியும், சீருடை அணியாமலும் வந்துள்ளார்.
இதை பார்த்த போக்குவரத்து போலீசார், அவரை நிறுத்தி, போக்குவரத்து விதிகளை மீறியதாக, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் கோபமடைந்த அவர், சாலையில் நின்றபடி போலீசாரை பார்த்து கத்தினார். அத்துடன், ஆட்டோவுக்கும், போலீஸ் வாகனத்தின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சித்தார்.
அதற்குள் அவரை பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று, வழக்குப் பதிவு செய்தனர்.
இச்சம்பவம் அனைத்தையும், தங்கள் மொபைல் போனில் போலீசார் பதிவு செய்திருந்தனர்.

