ADDED : நவ 20, 2024 12:22 AM
ஆனேக்கல்; தங்கையின் திருமண பத்திரிகையை வினியோகித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய ரவுடியை கொல்ல முயற்சி நடந்து உள்ளது.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல் அருகே மதனபட்டணா கிராமத்தில் வசிப்பவர் மனு, 35. ரவுடியான இவர் மீது மூன்று கொலை வழக்குகள், ஐந்து கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், மனுவின் தங்கைக்கு வரும் 23ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதனால் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வினியோகிக்க மனு, தனது கூட்டாளிகளுடன் நேற்று முன்தினம் மாலை காரில் புறப்பட்டு சென்றார். பத்திரிகை வினியோகித்து விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு காரில் திரும்பி வந்தனர். காரை மனு ஓட்டினார்.
மதனபட்டணா அருகே வந்தபோது, மனு ஓட்டி சென்ற கார் மீது, இன்னொரு கார் பின்பக்கமாக மோதியது. அந்த காரில் இருந்து இறங்கியவர்கள், அரிவாளை எடுத்து மனு, அவரது கூட்டாளிகளை வெட்ட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட மனு, காரை பின்னோக்கி வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பினார்.
கொலை முயற்சி குறித்து ஜிகனி போலீசில், மனு புகார் செய்தார். கொலை செய்ய வந்தவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பழிக்கு பழியாக மனுவை, எதிரணியை சேர்ந்த ரவுடிகள் கொல்ல முயன்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

