முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: டில்லியில் அதிர்ச்சி
முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: டில்லியில் அதிர்ச்சி
UPDATED : ஆக 20, 2025 06:17 PM
ADDED : ஆக 20, 2025 09:50 AM

புதுடில்லி: மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்ட டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் தலை முடியைப் பிடித்து இழுத்து,கன்னத்தில் அறைந்த நபரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
டில்லி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 20) காலை முதல்வர் இல்லத்தில் நடந்தது. அப்போது வந்த ஒரு நபர் திடீரென முதல்வர் மீது தாக்குதல் நடத்தினார். தலை முடியைப் பிடித்து இழுத்து,கன்னத்தில் அறைந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டத்தில் முதல்வரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என டில்லி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் டில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரிய விஷயம்
சம்பவ இடத்தில் இருந்த அஞ்சலி என்ற பெண் கூறியதாவது: மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஒரு ஏமாற்றுகாரர் முதல்வர் ரேகா குப்தா கன்னத்தில் அறைந்தார். இது ஒரு பெரிய விஷயம். நான் அங்கே இருந்தேன். அந்த நபர் முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தாக்கினார். பின்னர் அந்த நபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமானது!
முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக டில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் கூறியதாவது: இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முதல்வர் முழு டில்லியையும் வழிநடத்துக்கிறார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டும்.
அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பது குறையும் என்று நான் நினைக்கிறேன்.இந்த சம்பவம் பெண்ணின் பாதுகாப்பை அம்பலப்படுத்துகிறது. டில்லி முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், ஒரு சாதாரண ஆணோ அல்லது சாதாரண பெண்ணோ எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கொலை முயற்சி வழக்கு
டில்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. பொது ஊழியரை தாக்கி, கடமையை செய்ய விடாமல் தடுத்ததாகவும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.அந்த நபரின் பெயர் ராஜேஷ் சக்ரியா, 40, என்றும், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. நாய்ப்பிரியரான அவர், தெருநாய்களை பிடிக்கும் டில்லி மாநில அரசின் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அந்த நபரின் தாயார் பேட்டி அளித்துள்ளார்.தாக்குதல் நடத்திய நபர், முதல் நாளே டில்லி முதல்வரின் வீட்டுக்கு சென்று நோட்டமிட்டதும், வீடியோ எடுத்ததும், சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.