ஓய்வு பெற்ற கான்ஸ்டபிளிடம் ரூ.8 கோடி சொத்துக்கள் பறிமுதல்
ஓய்வு பெற்ற கான்ஸ்டபிளிடம் ரூ.8 கோடி சொத்துக்கள் பறிமுதல்
ADDED : டிச 25, 2024 12:52 AM
போபால், மத்திய பிரதேசத்தில், ஓய்வு பெற்ற கான்ஸ்டபிளிடம் இருந்து, 234 கிலோ வெள்ளி உட்பட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர்.
ம.பி.,யில் அரசு டாக்டராக பணிபுரிந்த ஆர்.கே.சர்மா என்பவர், 2015ல் உயிரிழந்தார்.
அவரது மகன் சவுரப் சர்மாவுக்கு, அதே ஆண்டில் கருணை அடிப்படையில், போக்குவரத்து துறையில் கான்ஸ்டபிள் வேலை வழங்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த அவர், 2023ல் விருப்ப ஓய்வு பெற்றார்.
பணியில் இருந்த காலத்தில், போலீஸ் பதவியை தவறாக பயன்படுத்தி, சவுரப் சர்மா பணம் சம்பாதித்தார்.
கான்ஸ்டபிளாக பணியாற்றிய அவர், போபால் உள்ளிட்ட நகரங்களில், தன் மனைவி, தாய், மைத்துனர், கூட்டாளிகள் சேத்தன் சிங் கவுட், ஷரத் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரின் பெயர்களில் பள்ளிகள், ஹோட்டல்களை துவங்கினார்.
அதிரடி சோதனை
குறுகிய காலத்திலேயே சவுரப் சர்மா அசுர வளர்ச்சி அடைந்தது, வருமான வரித்துறை, லோக் ஆயுக்தா அமைப்புகளை வியப்படையச் செய்தது.
இந்நிலையில், போபால் மாவட்டத்தின் அரேரா காலனியில் உள்ள சவுரப் சர்மா வீட்டில், கடந்த 18 மற்றும் 19ல், லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், 2.21 கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, சவுரப் சர்மா அலுவலகத்தில் நடந்த சோதனையில், 1.72 கோடி ரூபாய் ரொக்கம், 2.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 234 கிலோ வெள்ளி, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள இதர சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுவரை, சவுரப் சர்மா தொடர்புடைய இடங்களில் இருந்து, 7.98 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன.
50 கிலோ தங்கம்
இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி, சவுரப் சர்மா, அவரது மனைவி, தாய் மற்றும் கூட்டாளிகளான சேத்தன் சிங் கவுட், ஷரத் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 19ல், போபாலின் புறநகர் பகுதியில், சேத்தன் சிங் கவுட்டுக்கு சொந்தமான காரில் இருந்து 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் மற்றும் 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

