எந்தவொரு இந்தியரும் தங்கள் சொந்த மண்ணில்...; காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தல்
எந்தவொரு இந்தியரும் தங்கள் சொந்த மண்ணில்...; காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தல்
ADDED : டிச 29, 2025 03:21 PM

புதுடில்லி: எந்தவொரு இந்தியரும் தங்கள் சொந்த மண்ணில் அந்நியராக உணரப்படாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சசி தரூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: உத்தரகாண்டில் அனியல் சக்வா என்ற இளைஞர் கொடூரமாகக் கொல்லப்பட்டது ஒரு துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம். திரிபுராவைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஒரு பெருமைமிக்க இந்தியர், இனரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.
இழிவான வார்த்தைகளால் மனிதத்தன்மையற்ற முறையில் தரக்குறைவான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இறுதியில் கொலை செய்யப்பட்டார். இது ஒரு தனிப்பட்ட வன்முறைச் செயல் அல்ல; இது அறியாமை, பாரபட்சம் மற்றும் நமது சமூகத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து மதிக்கத் தவறியதன் விளைவாகும்.
வட இந்தியாவில் இனவெறி அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது, மேலும் இது ஆழ்ந்த வெட்கக்கேடானது. வளமான கலாசாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகளின் சங்கமமாகத் திகழும் வடகிழக்கு, இந்திய அடையாளத்திற்கு முக்கியமான ஒன்றாகும். இருந்த போதிலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வழக்கமாக இனரீதியான பாகுபாடு, புறக்கணிப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இது முடிவுக்கு வர வேண்டும்.
இந்த இளைஞருக்கு நாம் நீதி கோர வேண்டும், நீதிமன்றங்களில் மட்டுமல்ல, தேசத்தின் மனசாட்சியிலும் நீதி கோர வேண்டும். அவரது மரணம் ஒரு புள்ளிவிவரமாகவோ அல்லது கடந்து செல்லும் ஒரு செய்தியாகவோ சுருக்கப்படக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் இந்திய சமூகங்களின் வரலாறுகளையும் கலாசாரங்களையும் கற்பிக்க வேண்டும்.
ஊடகங்கள் வடகிழக்கு இந்தியர்களை கண்ணியத்துடன் கையாள வேண்டும். மேலும் சமூகம் தனது பாரபட்சங்களை மறக்க வேண்டும்.அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். மதத் தலைவர்கள் பேச வேண்டும். மவுனம் என்பது உடந்தையாக இருப்பதற்குச் சமம். தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஹிந்து மதம் பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பாரம்பரியம் கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழங்குடியினர், ஜாதிகள், மொழிகள் மற்றும் நம்பிக்கைகளைத் தன் மடியில் அரவணைத்துக்கொண்டது. நாம் வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் துக்கம் அனுசரிப்போம்.எந்தவொரு இந்தியரும் தங்கள் சொந்த மண்ணில் அந்நியராக உணரப்படாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.

