நான் முஸ்லிம்களை தாஜா செய்கிறேனா? மறுக்கிறார் மம்தா
நான் முஸ்லிம்களை தாஜா செய்கிறேனா? மறுக்கிறார் மம்தா
ADDED : டிச 30, 2025 05:34 AM

கொல்கட்டா: ''நான் முஸ்லிம்களை தாஜா செய்வதாக, சிலர் தவறாக குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையில் நான் மதச்சார்பற்றவள். அதனால் தான் சர்வமத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறேன்,'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்துடன் சேர்த்து, வரும் ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தலை அந்த மாநிலம் சந்திக்க உள்ளது.
இந்நிலையில், கொல்கட்டாவின் நியூடவுனில் துர்கை அம்மனுக்காக கலாசார கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு வி ழா நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற மம்தா பானர்ஜி பேசியதாவது:
சீக்கியர்களின் குருத்வாராவுக்கு நான் செல்லும்போது எந்த விமர்சனமும் எழுவதில்லை. ஆனால், ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அதை பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர்.
முஸ்லிம்களை தாஜா செய்வதற்காக நான் பங்கேற்பதாக அவர்கள் கூறுகின்றனர். மதச்சார்புடன் இதுவரை நடந்து கொண்டது இல்லை. சர்வமத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன். அது தான் உண்மை. ஆனால், ஒரு சிலர் இதை திரித்து கூறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

