ADDED : பிப் 23, 2024 02:24 AM

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான சரத் சந்திரபவார் கட்சிக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் , பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையில் இரண்டாக உடைந்தது.
இதனைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.
இதில் அஜித் பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தது. கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.
அதே சமயம் தேர்தல் ஆணையம் சரத்பவார் அணிக்கு சரத்சந்திர பவார் என புதிய கட்சி பெயரை வழங்கியது. சின்னமாக ‛‛ கொம்பு இசைக்கருவியை ஊதும் மனிதன்'' சின்னமாக சரத்பவாருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

