ADDED : நவ 08, 2024 07:38 AM

சாதிக்க வேண்டும் என்ற பிடிவாதம், விடா முயற்சி இருந்தால், வயதோ அல்லது உடல் ஊனமோ பொருட்டு அல்ல என்பதை, 61 வயது முதியவர் நிரூபித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் ஏஞ்சலோ ஜோசப், 61. இவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். குறிப்பாக ஓட்ட பந்தயத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அதிநவீன வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற உணவு, பணி அழுத்தம் போன்ற காரணங்களால், அவரது இதயம் பாதிப்படைந்தது. சில ஆண்டுகளுக்கு முன், இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின், படுக்கை புண் பிரச்னைக்கு ஆளாகி, மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்து, அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
மனம் தளராத ஜோசப், தன் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினார். அக்கம், பக்கத்தில், வீட்டின் சுற்றுப்பகுதியில் நிதானமாக நடை பயிற்சியை ஆரம்பித்தார். நாட்கள் செல்ல, செல்ல நடையின் வேகத்தை அதிகப்படுத்தினார். அதன்பின் வேகமாக ஓடினார். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. ஆனால், மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி பெற்று, ஓட்ட பந்தயங்களில் பங்கேற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, பல்வேறு போட்டிகளில் ஜோசப் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளார். 'இதய அறுவை செய்து கொண்டவர் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக ஓடக்கூடாது' என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் ஜோசப் இதை பொருட்படுத்தவில்லை. தன் வயது மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஓரங்கட்டி, தொடர்ந்து ஓட்டங்களில் பங்கேற்றார்.
உலக இதய தினத்தை முன்னிட்டு, அக்டோபரில் பெங்களூரில் நடந்த ஓட்டத்திலும் கூட, ஜோசப் பங்கேற்றார். மாராத்தான் ஓட்டத்திலும் கூட, சாதனை செய்துள்ளார்.
தன் தொடர் முயற்சியால், பழைய ஆரோக்கியம், உடற் திறனை திரும்ப பெற்றுள்ளார். விடா முயற்சியும், மனோ திடமும் இருந்தால், சாதனை செய்ய வயதோ, ஆரோக்கியமோ தடையே இல்லை என்பதை, ஜோசப் நிரூபித்துள்ளார்.
ஜோசப்புக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் தமீம் அகமது கூறியதாவது:
ஜோசப்பின் இதயத்தில் அடைப்பு இருந்தது. எனவே, பைபாஸ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஆரம்பத்திலேயே பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டதால், விரைந்து குணமாக்க முடிந்தது.
சரியான உணவு முறை, தன்னம்பிக்கை, வாழ்க்கை மாற்றத்தால், நோயாளிகள் இதய அறுவை சிகிச்சைக்கு பின்னரும், ஆரோக்கியமான வாழ்க்கை நடத்த முடியும். இந்த விஷயத்தில், ஜோசப் மற்றவருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.

