ரூ.200 கோடி மோசடி வழக்கு நடிகை ஜாக்குலின் மனு தள்ளுபடி
ரூ.200 கோடி மோசடி வழக்கு நடிகை ஜாக்குலின் மனு தள்ளுபடி
ADDED : செப் 22, 2025 11:42 PM

புதுடில்லி டில்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய, 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில், தன் மீது அமலாக்கத் துறை பதிந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தலைநகர் டில்லியில், தொழிலதிபர்கள் சிலரை மிரட்டி ஏமாற்றி, 215 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், அங்குள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட போது, அக்கட்சியின் தேர்தல் சின்னமான 'இரட்டை இலை'யை பெற்று தர தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் இவர் மீது புகார் உள்ளது.
மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் வாங்கிக் கொடுத்ததாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து, 215 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரும் சேர்க்கப்பட்டது.
இது தொடர்பாக அவரிடம் பல முறை விசாரணையும் நடந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் திட்டவட்டமாக மறுத்தார்.
தன் மீது அமலாக்கத் துறை பதிந்த பண மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்ந்த வழக்கை கடந்த ஜூலையில் டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. அதே சமயம், விசாரணையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது, பொருத்தமான நேரத்தில் நீதிமன்றத்தை அணுக அவருக்கு சுதந்திரம் அளித்தது.