குற்றங்களை தடுக்க நடவடிக்கை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
குற்றங்களை தடுக்க நடவடிக்கை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம்
ADDED : பிப் 20, 2024 07:06 AM

பெங்களூரு: ''குற்ற வழக்குகளை கட்டுப்படுத்த, மாநில போலீஸ் நடைமுறை வலுவாக உள்ளது,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
சட்டசபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
மாநிலத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இரவு ரோந்து பணி பலப்படுத்தப்பட்டது. சிறையில் இருந்து வருவோரை கண்காணிக்க, ரவுடிகள் அணிவகுப்பு நடத்துவது, சட்டவிரோத மட்கா, சூதாட்டம், சட்டவிரோத மதுபானம் விற்பனையை தடுக்க, அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது.
குற்ற வழக்குகளில், குற்றவாளிகளுக்கு ஜாமின் கிடைப்பதை தடுக்க, நீதிமன்றத்தில் விரைந்து குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, மகளிர் பாதுகாப்புக்காக, ராசி சென்னம்மா படை அமைக்கப்பட்டது, பொய்யான செய்திகள் வெளியிடுவோர் மீது, வழக்கு பதிவு செய்வது உட்பட, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
சைபர் குற்றங்களை தடுக்க, போதைப் பொருள் விற்பனையை தடுக்க, மாநிலம் முழுதும் 45 சைபர், கிரைம் போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில், சேப் சிட்டி, சேப்டி ஆப் உமன் திட்டத்தின் கீழ், 1,640 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 96 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.
மகளிர் சகாயவாணி 1091 என் செயல்படுகிறது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிங் ஹொய்சாளா, 112 ரோந்து வாகனங்கள், தினமும் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

