பரிசீலனைக்கு ஏற்பு * அமைச்சர்களை அதிகரிக்க கோரிய மனு * ஜூலையில் விசாரிப்பதாக ஐகோர்ட் உறுதி
பரிசீலனைக்கு ஏற்பு * அமைச்சர்களை அதிகரிக்க கோரிய மனு * ஜூலையில் விசாரிப்பதாக ஐகோர்ட் உறுதி
ADDED : ஏப் 09, 2025 11:09 PM
புதுடில்லி:டில்லி அரசில் அமைச்சர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த ஆகாஷ் கோயல், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
டில்லி சட்டசபையில் 70 எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர். அரசில் 38 துறைகள் உள்ளன. ஆனால், அரசை வழிநடத்த ஏழு அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது, மிகக் குறைந்த எண்ணிக்கை.
கோவா மாநிலத்தில் 40 எம்.எல்.ஏ.,க்கள் இருக்கும் நிலையில் 12 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சிக்கிம் மாநிலத்தில் 32 எம்.எல்.ஏ.,க்களில் 12 பேர் அமைச்சர் பதவி வகிக்கின்றனர்.
மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் பால இல்லாமல், தலைநகர் டில்லிக்கு தனி அந்தஸ்து உள்ளது.
டில்லியில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் எண்ணிக்கை அரசின் தன்னிச்சையான முடிவாக அமைந்துள்ளது. சட்ட விதிமுறையைப் பின்பற்றி அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மீறப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் எண்ணிக்கை போதுமான அளவு இல்லாததால் நிர்வாக சிக்கல்கள், திட்ட செயல்பாட்டில் தாமதம், தற்போதுள்ள அமைச்சர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் முதல்வர் உட்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, மொத்த எம்.எல்.ஏ.,க்களில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது என விதிமுறை உள்ளது. அதேபோல, 12க்கும் குறைவான அமைச்சர்களைக் கொண்டிருக்கக்கூடாது என்ற விதிமுறையும் உள்ளது. ஆனால், இதில் டில்லிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஏன்? இது நிர்வாக கட்டமைப்பில் முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.
எனவே, டில்லி அரசின் அமைச்சர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
டில்லி தனி அந்தஸ்து பெற்றிருப்பதால் அதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது.
அரசியலமைப்பு சாசனப்படி டில்லி நிர்வகிக்கப்படும் விதம் மற்ற மாநில நிர்வகிப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. டில்லி நிர்வாகத்தில் மத்திய அரசுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. டில்லியின் இந்த தனித்துவமான அரசியலமைப்பு அந்தஸ்து ஏற்றுக் கொள்ளப்பட்டால், மனுதாரர் எப்படி மற்ற மாநிலங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்?
ஆனால், இந்த மனு பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விசாரணை ஜூலை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

