ADDED : செப் 20, 2025 07:51 AM

புதுடில்லி: டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தலில் பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., தலைவர், செயலர், இணைச் செயலர் ஆகிய மூன்று பதவிகளை வென்றுள்ளது.
டில்லி பல்கலை மாணவர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 52 மையங்களில் 195 பூத்களில் 1.55 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓட்டளித்திருந்தனர். தேர்தல் முடிவில் பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமோக வெற்றி பெற்றது.
ஏ.பி.வி.பி., சார்பில் போட்டியிட்ட ஆர்யன் மான் என்ற மாணவர் 28,841 ஓட்டுகளை பெற்று, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் போட்டியிட்ட ஜோஸ்லின் நந்திதா சவுத்ரியை வீழ்த்தினார்.
துணைத் தலைவருக்கான போட்டியில் காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் வெற்றி பெற்றார். அதேவேளையில், செயலர் மற்றும் இணைச் செயலர் பதவிகளை ஏ.பி.வி.பி., வேட்பாளர்கள் குணால் சவுத்ரி, தீபிகா ஜா ஆகியோர் கைப்பற்றினர்.
கடந்த ஆண்டு நடந்த மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.