டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல்; தலைவர் உள்ளிட்ட 3 பதவிகளில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி
டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல்; தலைவர் உள்ளிட்ட 3 பதவிகளில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி
UPDATED : செப் 19, 2025 04:27 PM
ADDED : செப் 19, 2025 01:23 PM

புதுடில்லி: டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி, செயலாளர், இணை செயலாளர் பொறுப்புகளில் பாஜவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
டில்லி பல்கலை மாணவர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 52 மையங்களில் 195 பூத்களில் 1.55 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓட்டளித்திருந்தனர்.
மாணவர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு பாஜவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷன் (ஏபிவிபி) அமைப்பின் சார்பில் ஆர்யன் மான் என்ற மாணவனும், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் ஜோஸ்லின் நந்திதா சவுத்ரியும், எஸ்எப்ஐ (SFI) மற்றும் ஏஐஎஸ்ஏ (AISA) கூட்டணி சார்பில் அஞ்சலி என்ற மாணவியும் போட்டியிட்டனர்.
அதேபோல, துணை தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. நேற்று பதிவான ஓட்டுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் ஆர்யன் மான் 28,841 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்திய தேசிய மாணவர் சங்கம் வேட்பாளர் ஜோஸ்லின் சவுத்ரி 12,645 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
அதேவேளையில், துணைத் தலைவருக்கான போட்டியில் காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் 29,339 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஏபிவிபி வேட்பாளர் கோவிந்த் தன்வர் 20,547 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
செயலாளருக்கான தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர் குணால் சவுத்ரி 23,779 ஓட்டுகள் பெற்றும், இணை செயலாளருக்கான தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர் தீபிகா ஜா 21,825 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்
தலைவர்: ஆர்யன் மான் (ஏபிவிபி)
துணைத் தலைவர் : ராகுல் ஜான்ஸ்லா( என்எஸ்யுஐ)
செயலாளர் : குணால் சவுத்ரி (ஏபிவிபி)
துணைச் செயலாளர்: தீபிகா ஜா (ஏபிவிபி)
கடந்த ஆண்டு நடந்த மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.