காங்கிரசிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவருக்கு சீட்டா? தான் தோன்றி தனமாக செயல்படுவதாக சுதாகருக்கு எதிர்ப்பு
காங்கிரசிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவருக்கு சீட்டா? தான் தோன்றி தனமாக செயல்படுவதாக சுதாகருக்கு எதிர்ப்பு
ADDED : பிப் 06, 2024 11:12 PM

சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில் நானே வேட்பாளர் என கூறிக் கொண்டு, முன்னாள் அமைச்சர் சுதாகர் பிரசாரத்தை துவக்கியுள்ளதால், தனது மகனுக்கு சீட் கிடைக்கும் என்ற கனவில் இருந்த எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் கோபமடைந்து உள்ளார்.
சிக்கபல்லாபூரில் பா.ஜ., - எம்.பி.,யாக உள்ள பச்சே கவுடா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். இவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக உள்ள தன் மகன் சரத் பச்சே கவுடாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என கருதப்படுகிறது.
டில்லியில் சந்திப்பு
இது ஒரு புறமிருக்க, சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பா.ஜ.,வின் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சுதாகர், கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். சமீபத்தில் கட்சியின் மேலிட தலைவர்களை டில்லியில் சந்தித்து பேசினார்.
மாநிலத்துக்கு திரும்பியவுடன், தீவிர அரசியலில் மீண்டும் ஈடுபட துவங்கி உள்ளார். பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். சிக்கபல்லாப்பூர் தொகுதி வேட்பாளர் நானே என்றும், கட்சி மேலிடம் எனக்கு ஆதரவு அளித்து உள்ளது. அதேபோன்று ம.ஜ.த.,வின் தேவகவுடா, குமாரசாமியும் எனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர், என்றார்.
பா.ஜ., வேட்பாளர்களை, கட்சியின் முக்கிய முடிவுகளை பார்லிமென்ட் குழு தான் அறிவிக்கும். ஆனால், அதற்கு முன்பாகவே, இவரே வேட்பாளர் என கூறி வருகிறார்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., அதிருப்தி
இவரின் நடவடிக்கையால், ஏற்கனவே தனது மகன் அலோக்கிற்கு சீட் கேட்டுள்ள எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் அதிருப்தி அடைந்து உள்ளார். அவர் கூறுகையில், ''எந்த தேர்தலாக இருந்தாலும் கட்சி தலைமை தான் முடிவு செய்யும்; நானும், என் மகன் அலோக்கிற்கு, சிக்கபல்லாப்பூர் தொகுதியில் வாய்ப்பு கேட்டு உள்ளேன். யார் வேட்பாளர் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கூட்டணி என்பதால் யாருக்கு தொகுதி என்பது முடிவாகவில்லை,'' என்றார்.
இதற்கு சுதாகர் பதிலளிக்கையில், ''நான் பா.ஜ.,வில் இணைந்து ஐந்து ஆண்டுகளாகிறது. என்னை தெரியாது என்றால், அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. அர்ப்பணிப்புடன் பணி செய்து வருகிறேன். சிக்கபல்லாபூர் தொகுதியில் சீட் கேட்டுள்ளேன். இல்லை என்றால் ஏன் கவலைப்பட வேண்டும்.
''சட்டசபை தேர்தலில் எதிர்பாராத தோல்வியால் கட்சியை வழி நடத்துவது கடினம் என்ற ஒரே காரணத்துக்காக சீட் கேட்டுள்ளேன். கட்சியும், அமைப்பும் என்ன முடிவெடுத்தாலும், அதற்கு கட்டுப்படுவேன்,'' என்றார்.
சுதாகரும், விஸ்வநாத்தும் தன் ஆதரவு தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
- நமது நிருபர் -

