தேசிய உறுதிப்பாட்டின் அடையாளம்: ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு பெருமிதம்
தேசிய உறுதிப்பாட்டின் அடையாளம்: ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு பெருமிதம்
ADDED : டிச 31, 2025 10:55 PM

புதுடில்லி: ''இந்தியாவின் ராணுவ வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாகவும், ராணுவ துல்லியம் மற்றும் தேசிய உறுதிப்பாட்டின் அடையாளமாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை நினைவு கூரப்படும்'', என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா வந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை துவக்கிய இந்தியா, பாகிஸ்தானின் பயங்கரவாத தலங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து அத்துமீற முயன்ற பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. நான்கு நாட்கள் நடந்த இந்த மோதலில் இந்தியாவின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் கெஞ்சியது. இதனையடுத்து ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்தாண்டின் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு மிளிரும் சான்றாக உள்ளது. துல்லியம், தொழில்முறையுடன் இந்திய ஆயுதப்படைகளானது, பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பின் மையங்களை தாக்கி, தீர்க்கமான அடியை வழங்கி உள்ளது.
இந்தியா பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளாது. அதை ஆதரிப்பவர்கள் முழு பலத்துடன் பழிவாங்கப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை உலக நாடுகளுக்கு இந்த நடவடிக்கை அனுப்பி உள்ளது.
இந்தியாவின் ராணுவ வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாகவும், ராணுவ துல்லியம் மற்றும் தேசிய உறுதிப்பாட்டின் அடையாளமாகவும் இந்த நடவடிக்கை நினைவு கூரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

