ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் 12 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் 12 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்பு
ADDED : மார் 11, 2024 03:50 AM
புதுடில்லி : டில்லி குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள, 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர், 12 மணி நேர போராட்டத்திற்கு பின், நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
டில்லி கேஷேபூர் மண்டி பகுதியில், குடிநீர் வாரிய சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்ததாக நேற்று முன்தினம் இரவு தகவல் வெளியானது. இதையடுத்து, தீயணைப்பு படையினருடன் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது குழந்தை அல்ல என்றும், 30 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, ஆழ்துளை கிணற்றின் அருகே பள்ளம் தோண்டி, அவரை உயிருடன் மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, 12 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர், ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து அந்த நபரை சடலமாக மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து, டில்லி நீர் வளத்துறை அமைச்சர் அதிஷி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டில்லி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி. பூட்டப்பட்ட அறைக்குள் தான் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது.
அதையும் மீறி உள்ளே நுழைந்த நபர் தான் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவர் எதற்காக வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற நிகழ்வுகள் இனி நிகழாதவாறு, பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை உடனே மூட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

