கிராமத்தினருக்கு சேவை செய்யும் ஏழைகளின் நடமாடும் டாக்டர்
கிராமத்தினருக்கு சேவை செய்யும் ஏழைகளின் நடமாடும் டாக்டர்
ADDED : அக் 27, 2024 11:00 PM

வறுமையில் அவதிப்பட்டும் மனம் தளராமல் மருத்துவ கல்வியை முடித்து, அறுவை சிகிச்சை வல்லுனராக உயர்ந்தவர், இப்போது பலரின் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றுகிறார். இவரை நடமாடும் கடவுளாக மக்கள் பார்க்கின்றனர்.
இன்றைய காலத்தில் மருத்துவத்தை பணம் காய்க்கும் தொழிலாக பார்ப்பவர்களே அதிகம். நோயாளிகளிடம் மனம் போனபடி பணம் வசூலிப்பதை பார்த்திருக்கிறோம்.
பணம் கட்டவில்லை என்பதால், நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. அரசு மருத்துவமனையிலும் கூட, இத்தகைய சூழ்நிலை நிலவுகிறது.
சிறிய கிராமம்
ஆனால் வாட்டி வதைத்த வறுமைக்கு நடுவிலும், மனம் தளராமல் மருத்துவம் படித்த டாக்டர் ரமேஷ், ஏழைகளுக்கு சேவை செய்து முன்மாதிரியாக வாழ்கிறார்.
துமகூரு, குனிகல்லின் சந்தேமாவத்துார் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர். இவர், ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். பால்ய நாட்கள் வயலிலேயே கழித்தார்.
தன் சிறு வயதில், கிராமத்துப் பெண்கள், மாதவிடாயின்போது, கர்ப்ப காலத்தில், பிரசவமான பின் அனுபவித்த கஷ்டங்களை பார்த்து வருந்தினார். இவரது தாயும் கூட, மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட்டுள்ளார்.
தந்தைக்கும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அந்த கிராமத்தில் சரியான மருத்துவ வசதி இல்லை. தன் கிராமத்துக்கு மருத்துவ வசதி தேவை என்பதை உணர்ந்து கொண்டார். இதற்காக டாக்டராக விரும்பினார்.
வீட்டில் வறுமை தாண்டவமாடியும், மனம் தளராமல் 1988ல் மைசூரு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தார்.
அப்போது அவரது ஒரு காது, கேட்கும் சக்தியை இழந்திருந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. மருத்துவ படிப்புக்கு அதிக பணம் தேவைப்பட்டது. எனவே அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை.
வல்லுனர்
எம்.பி.பி.எஸ்., முடித்த பின், குடும்பத்தை நிர்வகிக்கவும், தன்னுடன் பிறந்தவர்களின் கல்விக்காகவும், கேரளாவின் கிராமப்புறங்களில் பணியாற்றினார்.
பணியாற்றியபடியே, எம்.டி., தேர்வுக்கு தயாரானார். 1993 மற்றும் 1994ல், எம்.டி., டி.ஜி.ஓ., மற்றும் எப்.சி.பி.எஸ்., மருத்துவ உயர் படிப்பை முடித்தார்.
கேரளாவின் மருத்துவ கல்லுாரியில் இயக்குனராக, தலைமை லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வல்லுனராக பணியாற்றுகிறார்.
தன் நண்பரின் காரை வாடகைக்கு பெற்றுக் கொண்டு, அதில் லேப்ராஸ்கோபிக் உபகரணங்களை கர்நாடகாவின் பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு சென்று, பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்தார்.
மக்கள் சந்திப்பு
இப்போதும் அந்த சேவையை தொடர்கிறார். தன் டாக்டர்கள் குழுவுடன், கிராமம், கிராமமாக செல்கிறார்; முகாம்கள் நடத்துகிறார்.
இதுவரை பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான, ஒரு லட்சம் அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். கர்நாடகாவில் 3டி லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை அறிமுகம் செய்த, முதல் அறுவை சிகிச்சை நிபுணர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தில், 2,000 வல்லுனர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
தன் சொந்த கிராமத்தில், அரசு பள்ளி கட்ட நிலம் கொடுத்தார்.
பத்து ஆண்டுகளாக பள்ளிக்கு தேவையான உதவிகளையும் செய்கிறார். அதே இடத்தில் கிளினிக் திறந்துள்ளார்.
வாரம் ஒரு முறை நோயாளிகளுகு இலவசமாக சிகிச்சை அளித்து, மருந்து கொடுக்கிறார்.
அவ்வப்போது தன் கிராமத்துக்கு சென்று, மக்களை சந்திக்கிறார். ஆலோசனை கூறுகிறார்.
உயர் மருத்துவம் படிக்கும் பலர், வெளிநாடுகளுக்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்புகின்றனர்.சொந்த ஊரை பற்றி கவலைப்படுவதில்லை.
இவர்களுக்கு இடையே, டாக்டர் ரமேஷ் தன் கிராமத்தினருக்கு, சேவை செய்து நடமாடும் கடவுளாக திகழ்கிறார்
- நமது நிருபர் -.

