மலை மஹாதேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கு 4 லட்சம் லட்டு தயார்
மலை மஹாதேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கு 4 லட்சம் லட்டு தயார்
ADDED : மார் 08, 2024 02:15 AM

சாம்ராஜ் நகர்: மஹா சிவராத்திரியை ஒட்டி, மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க, 4 லட்சம் லட்டுகள் தயாராக உள்ளன.
மஹா சிவராத்திரியை ஒட்டி, மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு பெங்களூரு, ராம்நகர், சென்னபட்டினா, சாம்ராஜ் நகர், மாண்டியா, மைசூரு, தமிழகத்தில் இருந்து பக்தர்கள் நேற்று முதலே வருகை தர துவங்கி விட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. திருப்பதி போன்று, மலை மஹாதேஸ்வராவிலும் லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என்று பக்தர்களிடம் இருந்து கோரிக்கை வந்தது.
அதிகரிக்கும் கூட்டம்
இதையடுத்து மலை மஹாதேஸ்வரா மலை ஆணையம், 4 லட்சம் லட்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இம்முறை கூட்டம் அதிகரிக்கும் என்ற காரணத்தால், கூடுதலாக ஒரு லட்சம் லட்டுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக, கோவில் செயலர் ரகு கூறியதாவது:
கர்நாடகாவில் இம்முறை வெயில் அதிகரித்து உள்ளது. எனவே, பொது மக்கள் வசதிக்காக, மலை அடிவாரத்தில் இருந்து கோவில் இருக்கும் வரையிலும் பானை தண்ணீர் வைக்கப்பட்டு உள்ளது.
பெண்கள், தங்கள் கைக்குழந்தைகளுடன் வந்தால், குழந்தைகளுக்கு பால் ஊட்ட, தென்னை இலை மூலம் தற்காலிக அறை அமைக்கப்பட்டு உள்ளது. கோவிலின் இருபுறமும் சுத்தமான குடிநீர் ஆலையில், 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும்.
அன்னதானம் பரிமாறும் பகுதியில் ஒரே நேரத்தில் 2,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.
விழாவை ஒட்டி, பக்தர்களுக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம், கூடுதலாக 500 பஸ்களை இயக்க முன்வந்து உள்ளது. வாகனங்கள் பழுதடைந்தால், அதை சரி செய்ய, 15 தொழில்நுட்ப பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மலையில் தற்காலிக சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 100 நடமாடும் கழிப்பறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு பஸ்கள்
இன்று காலை 6:00 மணி முதல் 12ம் தேதி காலை 6:00 மணி வரை இருசக்கர வாகன ஓட்டிகள், மலை மஹாதேஸ்வரா செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் பஸ்சில் வருவதற்காக, மலை அடிவாரத்தில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை, நாளை அமாவாசை பூஜை, 10 ம் தேதி காலை மஹா ரதோற்சவம் நடக்கிறது. அன்று இரவு அபிஷேக பூஜை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

