ADDED : செப் 14, 2025 03:23 AM

புதுடில்லி:வடகிழக்கு டில்லியில், லாரி டிரைவருக்கு மயக்க மருந்து கொடுத்து, 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6,000 கிலோ செம்புத் துகள்களை கொள்ளையடித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
புராரியைச் சேர்ந்தவர் மணீஷ் குமார்,27. லாரி டிரைவர். கடந்த 9ம் தேதி காலை, 9:00 மணிக்கு லிபாஸ்பூரில் இருந்து மண்டோலிக்கு 6,000 கிலோ செம்புத் துகள்களை லாரியில் ஏற்றிச் சென்றார்.
வடகிழக்கு டில்லியின் சோனியா விஹார் சிக்னேச்சர் பாலம் அருகே ஒரு கார், லாரியை வழிமறித்தது.
காரில் இருந்து இறங்கிய இருவர், லாரிக்குள் ஏறி மணீஷ் குமார் கையில் மயக்க மருந்து செலுத்தினர். அவர் மயங்கியதும் அதில் ஒருவர் லாரியை ஓட்டினார். மேலும் இருவர் காரில் லாரியை பின் தொடர்ந்து வந்தனர்.
லாரியை கடத்திச் சென்று, லட்சக்கணக்கான மதிப்புள்ள செம்புத் துகள்களை தங்கள் கிடங்கில் இறக்கிவிட்டு, லாரியை ஆள் அரவமற்ற இடத்தில் நிறுத்தி விட்டு தப்பினர்.
நீண்ட் நேரம் ஒரு லாரி நிற்பது குறித்து தகவல் அறிந்து போலீசார் வந்தனர்.
லாரிக்குள் மயங்கிக் கிடந்த குமாரை, மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நான்கு கொள்ளையரை நேற்று கைது செய்து, 6,000 கிலோ செம்புத்துகள்களை மீட்டனர். நான்கு பேரிடமும் விசாரணை நடக்கிறது.