லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி 35 நாள் உண்ணாவிரதம்
லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி 35 நாள் உண்ணாவிரதம்
ADDED : செப் 11, 2025 06:14 AM

புதுடில்லி: லடாக் யூனியன் பிரதே சத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, காலநிலை ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சூக், 35 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவங்கினார்.
ஜம்மு -- - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆக., 5ல் மத்திய பா.ஜ., அரசு ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இந்நிலையில், லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த காலநிலை ஆர்வலரும், கல்வியாளரும், ரமோன் மகசேசே விருது பெற்றவருமான சோனம் வாங்சூக், உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று துவங்கினார். அவருடன் லே தன்னாட்சி குழுவின் ஆறு உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது சோனம் வாங்சூக் கூறியதாவது:
கடந்த இரு மாதங்களாக, எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எந்த கூட்டத்தையும் கூட்டவில்லை; பேச்சும் நடத்தவில்லை. ஆகையால், மாநில அந்தஸ்து குறித்த எங்கள் கோரிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்து, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிய உள்ளோம். இங்குள்ள லே தன்னாட்சி குழுவுக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது.
கடந்த தேர்தலின் போது, மத்தியில் ஆளும் பா.ஜ., மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தது. இந்த தேர்தலுக்குள் அது நிறைவேற்றப்பட வேண்டும். மகாத்மா காந்தி பிறந்த அக்., 2ம் தேதி வரை 35 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் போராட்டம் அமைதியானது, வன்முறையற்றது, எங்கள் கோரிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் வரம்பிற்குள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.