சுதந்திர பாலஸ்தீன அரசு உருவாக இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவு
சுதந்திர பாலஸ்தீன அரசு உருவாக இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவு
ADDED : செப் 14, 2025 12:38 AM

நியூயார்க்:சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்குவதை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமான நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போர், இரண்டாண்டுகளை எட்டியுள்ளது.
'நியூயார்க் பிரகடனம்' இந்நிலையில், காசா போரை முடிவுக்கு கொண்டு வரவும், இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு நியாயமான மற்றும் நீடித்த தீர்வை அடைய வழி வகுக்கும் ஒரு பிரகடனத்தை பிரான்சும், சவுதி அரேபியாவும் இணைந்து 'நியூயார்க் பிரகடனம்' என்ற பெயரில் ஐ.நா., பொதுச்சபையில் தாக்கல் செய்தன.
இதற்கு இந்தியா உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் ஓட்டளித்தன. அதே நேரத்தில், 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
பிரகடனத்துக்கு எதிராக ஓட்டளித்த நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா, அர்ஜென்டினா மற்றும் ஹங்கேரி ஆகியவை அடங்கும். இந்தியா நீண்ட காலமாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
குறிப்பாக, 1988ம் ஆண்டில் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியாவாகும். நியூயார்க் பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்:
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு நியாயமான மற்றும் நீடித்த தீர்வை அடைய உலக நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டனம் காசாவில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.
இறையாண்மை கொண்ட மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.
கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் வன்முறை மற்றும் குடியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என, இஸ்ரேலிடம் கோருதல்.
காசா, பாலஸ்தீன நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அது ஆக்கிரமிப்பு, முற்றுகை அல்லது கட்டாய இடப்பெயர்வு இல்லாமல் மேற்கு கரையுடன் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்து, ஆயுதங்களை ஒப்படைப்பதுடன், காசா மீதான தன் கட்டுப்பாட்டை ஹமாஸ் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என, தீர்மானம் வலியுறுத்தியது.