தனி நபர் வீட்டில் 12 ஆண்டுகளாக இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையம்
தனி நபர் வீட்டில் 12 ஆண்டுகளாக இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : மார் 09, 2024 11:16 PM

தாவணகெரே: தாவணகெரேயில் 12 ஆண்டுகளாக மாதம் 5,000 ரூபாய் வாடகையில், தனி நபர் வீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
தாவணகெரே மாவட்டத்தில் சன்னகிரியின் கரேகேட் கிராமம் உள்ளது. இங்கு 6,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், அரசு கட்டடம் இல்லாததால், 12 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனை கட்ட, 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால், மருத்துவமனை கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.
அன்று முதல், வாகீஷ் என்வரின் வீட்டில், கடந்த 12 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கபாலா, காசிபுரா, ஆலுார், ஹரேமல்லபூர், நவிலேஹால், தோத்தகட்டா, சோமல்பூர் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.
மாதந்தோறும் கிராம பஞ்சாயத்து மூலம், வாகீஷுக்கு 5,000 ரூபாய் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.
சில நேரங்களில் வாடகை கட்டாமல் விட்டுவிட்டால், சுகாதார நிலையத்தை, உரிமையாளர் பூட்டி விடுகிறார். இதனால் ஊழியர்கள், நோயாளிகள் வெளியே நிற்க வேண்டிய சம்பவமும் நடந்துள்ளது.
இது தொடர்பாக, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மேக்னா கூறியதாவது:
எங்களுக்கு கட்டடம் தான் பெரிய பிரச்னை. வாடகை வீட்டில் மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் என்றால், குறைந்தபட்சம் ஆறு படுக்கைகளாவது இருக்க வேண்டும். ஆனால், இங்கு இரண்டு படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. தினமும் 60 முதல் 80 நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இடப்பற்றாக்குறைால் ஆய்வக வேலை செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கிராம தலைவர் பர்ஹானா ஜெஹ்ரூன் மிர்சா கூறுகையில், ''இக்கிராமத்திற்காக கட்டடப்பட்ட மருத்துவமனை பணிகள் பாதியில் நிற்கின்றன. விரைந்து கட்டடம் முடித்து தரப்படுமென எம்.எல்.ஏ., பசவராஜ் உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.

