யதுவீர், பி.சி.மோகன், சவும்யா, 'ஸ்டார்' சந்துரு ஊர்வலமாக வந்து வேட்புமனுக்கள் தாக்கல்
யதுவீர், பி.சி.மோகன், சவும்யா, 'ஸ்டார்' சந்துரு ஊர்வலமாக வந்து வேட்புமனுக்கள் தாக்கல்
ADDED : ஏப் 01, 2024 11:49 PM
பெங்களூரு : பா.ஜ.,வின் யதுவீர், பி.சி.மோகன், சோமண்ணா, கோவிந்த் கார்ஜோள், சுதாகர்; காங்கிரசின் சவும்யா, ஸ்டார் சந்துரு, ஸ்ரயேஷ் படேல், ரக் ஷா ராமையா; ம.ஜ.த.,வின் கோலார் மல்லேஸ்பாபு உட்பட பலர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கர்நாடகாவில் முதல் கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல், இம்மாதம் 28ம் தேதி துவங்கியது. மனு தாக்கலுக்கு நாளை மறுநாள் கடைசி. ஏற்கனவே வெவ்வேறு தொகுதிகளில், 50 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று மட்டுமே மாநிலம் முழுதும் 46 ஆண்கள், மூன்று பெண்கள் என 49 பேர் மனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி, ஜெயநகரில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, திறந்த வாகனத்தில், தேர்தல் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றார்.
துணை முதல்வர் சிவகுமார், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பின், தேர்தல் அதிகாரி வினோத் பிரியாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுபோன்று, பெங்., சென்ட்ரல் தொகுதி பா.ஜ., வேட்பாளர் பி.சி.மோகன், சிவாஜிநகர் ஷெப்பிங்ஸ் சாலை முத்தியாலம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின், பன்னப்பா பூங்காவில் இருந்து, திறந்த வாகனத்தில், மாநகராட்சி தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ்குமார், ரகு, ஜனார்த்தனரெட்டி ஆகியோருடன் வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக ஏராளமான தொண்டர்களின் பங்கேற்ற ஊர்வலத்தின் போது, பிரமாண்டமான ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது.
மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீர், மன்னர் வம்சத்தின் பிரமோதா தேவியிடம் ஆசி பெற்று, அவரது கையால் வேட்புனுவை பெற்று கொண்டார். அரண்மனை வளாகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
பின், பிரமோதா தேவி, எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சா உட்பட பா.ஜ., தலைவர்களுடன் வந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜேந்திராவிடம் மனு தாக்கல் செய்தார். நாளை பேரணியாக வந்து மேலும் ஒரு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதுபோன்று, மாண்டியா காங்கிரஸ் வேட்பாளரான ஸ்டார் சந்துரு; ஹாசன் காங்., வேட்பாளர் ஸ்ரேஷ் படேல்; துமகூரு பா.ஜ., வேட்பாளர் சோமண்ணா; சித்ரதுர்கா பா.ஜ., வேட்பாளர் கோவிந்த் கார்ஜோள்; சிக்கபல்லாபூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகர்; காங்கிரஸ் வேட்பாளர் ரக் ஷா ராமையா; கோலார் ம.ஜ.த., வேட்பாளர் மல்லேஸ்பாபு உட்பட பலர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பெரும்பாலான வேட்பாளர்கள் வரும் 3, 4ம் தேதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யஉள்ளனர்.

