ADDED : ஏப் 12, 2024 01:05 AM

புதுடில்லி:சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்தின் ராஜினாமா கடிதம் இன்னும் முதல்வரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதனால் அவர் அமைச்சராகவே நீடிப்பதாக மாநில அரசின் வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் மதுபானக் கொள்கை விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
இதே வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், நேற்று முன் தினம் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அத்துடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் வெளியேறினார். இவரது இந்த முடிவு, டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோதிலும், ராஜ்குமார் ஆனந்த் இன்னும் சட்டபூர்வமாக அமைச்சராகவே தொடர்கிறார்.
அவரது ராஜினாமா கடிதத்துக்கு முதல்வர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அவரது கடிதம் முதல்வரை சென்றடைவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம்' என, மாநில அரசின் வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சரின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்டு, முதல்வர் செய்யும் பரிந்துரை கடிதத்துக்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். அதுவரை அலுவலக ரீதியாக அமைச்சராகவே ராஜ்குமார் ஆனந்த் நீடிப்பார்.
'சமூக நலத்துறை அமைச்சர் ராஜினாமா குறித்து நேற்றிரவு வரை எந்த கடிதமும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை' என, துணை நிலை கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
'ஆனந்தின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதம் ஏதும் தங்களுக்கு வரவில்லை' என, சட்டசபை சபாநாயகர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நடக்கும் வேளையில் அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து அறிய அரசியல்வாதிகளும் வாக்காளர்களும் ஆர்வமாக உள்ளனர். அவர் விரைவில் பா.ஜ.,வில் சேருவார் என, ஆம் ஆத்மி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி அரசாங்கத்தின் மூன்றாவது தலித் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் பதவியை ராஜினாமா செய்ததால், சிவில் லைன்ஸ் பகுதியில் அவர் குடியிருக்கும் அரசு பங்களா திடீரென பிரபலமடைந்துள்ளது.

