எம்.பி., - எம்.எல்.ஏ., மீதான வழக்கு விரைவாக முடிக்க என்ன வழி?
எம்.பி., - எம்.எல்.ஏ., மீதான வழக்கு விரைவாக முடிக்க என்ன வழி?
ADDED : ஏப் 22, 2024 11:32 PM

புதுடில்லி: எம்.பி., - - எம்.எல்.ஏ.,க்கள் மீதான, 2,000க்கும் மேற்பட்ட வழக்குகளில், கடந்தாண்டு மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகள் விசாரணையை வேகமாக முடிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுதும் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள், ஒரு குறிப்பிட்ட வழக்கை முடிந்தவரை ஓர் ஆண்டுக்குள் முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிமினல் வழக்குகள்
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவுவதற்கு, அமிகஸ் கியூரியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தற்போது லோக்சபாவுக்கு நடக்கும் தேர்தலில், முதல் இரண்டு கட்டங்களில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் 2,810 பேரில், 501 பேர் மீது, அதாவது, 18 சதவீதம் பேர் மீது வழக்குகள் நிலுவை யில் உள்ளன.
கடந்த 2019 தேர்தலின்போது போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில், 1,500 பேர் மீது, அதாவது, 19 சதவீதம் பேர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்தன.
அதே நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 514 எம்.பி.,க்களில், 225 பேர் மீது, அதாவது, 44 சதவீதம் பேர் மீது வழக்குகள் உள்ளன.
கிரிமினல் வழக்குகள் இல்லாதவர்களைவிட, கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களே அதிகளவில் தேர்வாகியுள்ளனர்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளில் விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இதை, அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
கடந்த, 2023ம் ஆண்டில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான, 2,018 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
ஆலோசனை
அதே நேரத்தில், புதிதாக, 1,746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்தாண்டு ஜன., 1ம் தேதி நிலவரப்படி, நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4,474 ஆக உள்ளது.
கடந்தாண்டில் அதிக வழக்குகளில் தீர்வு காணப்பட்டாலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
அதனால், சிறப்பு நீதிமன்றங்களில், மூன்று ஆண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் விபரங்களை உயர் நீதிமன்றங்கள் கேட்டு பெற வேண்டும். அவற்றை விரைவாக முடிப்பதற்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

