'சந்தேஷ்காலி பிரச்னையில் தனிநபர்களை காப்பாற்ற அரசுக்கு என்ன அக்கறை'
'சந்தேஷ்காலி பிரச்னையில் தனிநபர்களை காப்பாற்ற அரசுக்கு என்ன அக்கறை'
ADDED : ஏப் 30, 2024 02:09 AM
புதுடில்லி, 'சந்தேஷ்காலி விவகாரத்தில் தொடர்புடைய சில தனி நபர்களை காப்பாற்ற, மேற்கு வங்க அரசு எதற்காக மனு தாக்கல் செய்துள்ளது' என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
பெண்கள் புகார்
இங்கு நடந்த ரேஷன் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, சந்தேஷ்காலியில் உள்ள திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் கடந்த ஜனவரியில் சென்றனர்.
அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறையினரை கடுமையாக தாக்கினர். இதில் அதிகாரிகள் பலத்த காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, சந்தேஷ்காலியில் உள்ள பழங்குடியினரின் நிலங்களை மிரட்டி பறித்ததுடன், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஷாஜஹான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பெண்கள் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கோல்கட்டா உயர் நீதிமன்றம் கடந்த 10ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய தனிநபர்களை காப்பாற்ற மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்திருப்பது வியப்பாக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணை
மேற்கு வங்க அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், அரசு தரப்பில் சில முக்கியமான தகவல்களை தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதை தொடர்ந்து வழக்கை ஜூலை மாதத்துக்கு அமர்வு ஒத்திவைத்தது.

