ADDED : ஏப் 13, 2024 05:44 AM
பெங்களூரு: மாநிலத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோரும் மாற்றத்திறனாளிகளும் இன்று முதல், வரும் 18ம் தேதி வரை வீட்டில் இருந்து ஓட்டுப் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்து ஓட்டுப்போடுவதற்கு தலைமை தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்துள்ளது.
கர்நாடகாவில், மொத்தம் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட 95,128 வாக்காளர்களில், 6,206 பேரும்; 22,222 மாற்றுத்திறனாளி வாக்காளர்களில், 201 பேரும் வீட்டில் இருந்து ஓட்டுப் போடுவதற்கு விண்ணப்பித்தனர்.
இவர்கள், இன்று முதல், 18ம் தேதி வரை வீட்டில் இருந்து ஓட்டுப் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஓட்டுச்சாவடி அதிகாரிகள், ஒரு போலீஸ், வீடியோகிராபர் அடங்கிய தேர்தல் அதிகாரிகள் குழு, சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீட்டிற்கு நேரில் செல்வர்.
வாக்காளர் அடையாள அட்டையை பரிசீலித்து, ஓட்டுச்சீட்டு மூலம், ஓட்டுப் போடுவதற்கு வாய்ப்பு தரப்படும். இந்த நிகழ்வு வீடியோப்பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதாக, முன்கூட்டியே வாக்காளர்களுக்கு தகவல் அளிக்கப்படும்.
இரண்டு முறை வீட்டிற்கு சென்றும், வாக்காளர் இல்லை என்றால், மீண்டும் ஓட்டுப் போடுவதற்கு வாய்ப்பு இல்லை. அரசியல் கட்சி முகவர்கள் உடன் இருக்கலாம்.

