ADDED : மார் 31, 2024 03:22 AM
முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பா.ஜ.,வில் ஐக்கியமானதால், பல்லாரி லோக்சபா தொகுதியில் காங்கிரசுக்கு கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
காங்கிரஸ் கர்நாடகாவில், ஆளுங்கட்சியாக இருந்தாலும், லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றிக்கு, அதிகம் போராட வேண்டியுள்ளது. ஏனென்றால் பல தொகுதிகளில் காங்கிரசை விட, எதிர்க்கட்சியான பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகம் உள்ளது.
அப்படிப்பட்ட தொகுதிகளில் பல்லாரியும் ஒன்று. இந்தத் தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீராமுலு. இவரது ஆருயிர் நண்பர் தான் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி.
சட்டவிரோத குவாரி வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு, ஜாமின் வழங்கும்போது பல்லாரிக்கு செல்லக் கூடாது என, உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
பல்லாரிக்கு வரவில்லை என்றாலும், இந்தத் தொகுதியில் இவரது செல்வாக்கு குறையவில்லை.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தன் சொந்த கட்சியான பா.ஜ.,வில் சேர்ந்தார். தன் கட்சியையும் இணைத்தார். இது கட்சியின் பலத்தை அதிகரித்துள்ளது. தன் நண்பர் ஸ்ரீராமுலுவை வெற்றி பெற வைக்க, ஜனார்த்தன ரெட்டி உறுதிபூண்டுள்ளார். இது காங்கிரசின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
காங்கிரஸ் இந்த தொகுதிக்கு, இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. உக்ரப்பா உட்பட, சிலர் சீட் எதிர்பார்க்கின்றனர். திறமையான வேட்பாளரை கட்சி மேலிடம் தேடி வந்தது. வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே, தொகுதியில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் திட்டம் வகுக்கிறது.
இதற்காகவே அமைச்சர்கள் சந்தோஷ் லாட், நாகேந்திரா, ஜமீர் அகமது கான் என, மூன்று அமைச்சர்களை பொறுப்பாளிகளாக, முதல்வர் சித்தராமையா நியமித்துள்ளார்.
வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், மூன்று அமைச்சர்களும் பல்லாரியிலேயே முகாமிட்டு, வேட்பாளரின் வெற்றிக்கு திட்டம் வகுப்பர்.
இந்த நிலையில் பா.ஜ., சவாலை எதிர்கொள்ளும் வகையில் எம்.எல்.ஏ., துக்காராமுக்கு காங்கிரஸ் மேலிடம் சீட் வழங்கியுள்ளது. இவரை வெற்றி பெறச் செய்வதற்கான வியூகத்தை மூவர் கூட்டணி வகுக்கத் துவங்கியுள்ளது.
- நமது நிருபர் -

