ADDED : மே 30, 2026 06:40 AM
சொல்கிறார்கள் / 31/05/26 ஞாயிறு 2 இதழ்
––––––––
அவள் விகடன், 07/04/2026. பக்: 48
தனித்து போராடும்
இந்த வாழ்க்கை
துணிச்சலை தருகிறது!
––––––––––
காஷ்மீரில் பயண நிறுவனம் மற்றும் உணவகம் நடத்தி வரும், தமிழகத்தைச் சேர்ந்த சிந்து:
புதுக்கோட்டை தான் என் சொந்த ஊர். 2020ல் தனி ஆளாக பயணம் செய்ய துவங்கினேன். இதுவரை 25 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களுக்கு பயணித்துள்ளேன்.
ஒரு முறை, இலங்கையைச் சேர்ந்த குடும்பம் காஷ்மீருக்கு வருவதாகவும், அவர்களுக்கு வழிகாட்டியாக வர முடியுமா என்றும் கேட்டனர். தங்குவதற்கான இடமும், சாப்பாடும் போக தினமும் 1,000 ரூபாய் என, ஐந்து நாளைக்கு 5,000 ரூபாய் கொடுப்பதாக கூறினர். நானும் ஒப்புக்கொண்டேன். அதன்பின், 2022ல் நானே பயண நிறுவனத்தை துவக்கினேன்.
டிரைவர்களை, ‘கேப்டன்’ என மரியாதையாக அழைப்பது, மற்றவர்களை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுப்பது என சில மாற்றங்களை கொண்டு வந்தேன். என்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் குடும்ப தேவைகளையும் பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன். இதனால், எனக்கு சரியான ஆட்கள் அமைந்தனர்.
இப்போது வரை காஷ்மீருக்கு, 1,000 குழு பயணங்களை ஏற்பாடு செய்திருக்கிறேன். தமிழர்கள் மட்டுமே, 8,000 பேர் வந்திருக்கின்றனர். என் பயணியருக்கு மட்டும் உணவு வழங்க, சின்னதாக இட்லி – தோசை கடை போடலாம் என்று முடிவு செய்து, 70,000 ரூபாய் மாத வாடகையில், 10க்கு 10 அடியில் ஒரு கடையை ஆரம்பித்தேன்.
தென்மாநில உணவகம் எதுவும் இங்கு இல்லை என்பதால், உள்ளூர் மக்கள் பலரும் சாப்பிட வந்தனர். மூன்று மாதங்களிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சாப்பிட வந்தபோது, ‘20 ஆண்டுகளாக நாங்கள் தமிழக உணவுகளை சாப்பிடவே இல்லை. இப்போது, மறுபடியும் கொண்டு வந்துள்ளீர்கள்; நன்றி!’ என்றார்.
அதன்பின் வங்கியில் கடன் வாங்கி, 1,000 சதுர அடியில், ‘இட்லி அண்டு தோசா டிலைட்’ என்ற உணவகத்தை ஆரம்பித்தேன். உணவகத்தில் நாங்கள் பயன்படுத்தும், 70 சதவீத பொருட்களை சென்னையில் இருந்து தான் வாங்குகிறோம். தற்போது, மேலும் இரண்டு கிளைகள் துவக்கி உள்ளேன்.
இணையத்தில், ‘தோசை கேர்ள் ஆப் காஷ்மீர்’ என்று தேடினால், என்னை பற்றிய தகவல்கள் வரும். தனியாக இருப்பதால் சில நேரங்களில் ரொம்ப மன அழுத்தமாக இருக்கும். அதுமாதிரி நேரங்களில், என் அறையில் நானே கதறி அழுது விடுவேன்.
சிறிது நேரத்தில் எழுந்து குளித்து, புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவேன். தனித்து போராடும் இந்த வாழ்க்கை, என்னை மிகவும் துணிச்சலான பெண்ணாக மாற்றி உள்ளது.
***
