எங்கும் மோடி அலை இல்லை காங்., சந்திரப்பா கண்டுபிடிப்பு
எங்கும் மோடி அலை இல்லை காங்., சந்திரப்பா கண்டுபிடிப்பு
ADDED : ஏப் 25, 2024 05:36 AM

சித்ரதுர்கா : ''சித்ரதுர்கா லோக்சபா தொகுதி சீட்டுக்கு, நான் நெருக்கடி கொடுக்கவில்லை. என் அனுபவத்தை மனதில் கொண்டு, கட்சி மேலிடம் எனக்கு சீட் கொடுத்தது,'' என, காங்கிரஸ் வேட்பாளர் சந்திரப்பா தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் கூறியதாவது:
வாக்காளர்களுடன் எனக்குள்ள தொடர்பு புதிதல்ல. கடந்த முறை தேர்தலில் தோற்றபோதும் நான் அவர்களுடன் தொடர்பில் இருந்தேன். மனம் தளராமல் கட்சிக்காக பணியாற்றினேன். தற்போது மேலும் அதிகமான பணிகளை செய்ய விரும்புகிறேன்.
இம்முறை கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து, சீட் பெறவில்லை. இதற்கு முன்பு எம்.பி.,யாக இருந்த அனுபவத்தை கருதி, கட்சி மேலிடம் என்னை களமிறக்கியது. மாநில காங்கிரஸ் தலைமை, சித்ரதுர்கா தொகுதிக்கு என் பெயரை மட்டுமே சிபாரிசு செய்திருந்தது.
நான் வெற்றி பெற்றால், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், பத்ரா மேலணை திட்டத்தை செயல்படுத்த முக்கியத்துவம் அளிப்பேன். துமகூரு - தாவணகெரே ரயில் பாதை பணிகளும் நடக்கும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி, மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்க செய்வேன்.
சித்ரதுர்காவில் எங்கும் மோடி அலையை, நான் பார்க்கவில்லை. பிரதமர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறார். மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் அரசு செயல்படுத்திய வாக்குறுதி திட்டங்கள், என் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

