காங்.,கில் உட்கட்சி பூசல் இல்லை முதல்வர் சித்தராமையா 'காமெடி'
காங்.,கில் உட்கட்சி பூசல் இல்லை முதல்வர் சித்தராமையா 'காமெடி'
ADDED : மே 15, 2024 09:40 AM

மைசூரு, : ''காங்கிரசில் உட்கட்சி பூசல் இல்லை. எங்களிடம் ஒற்றுமை இல்லை என்றால், லோக்சபா தேர்தலை எப்படி சந்தித்திருக்க முடியும்?,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காங்கிரசில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடையே உட்கட்சி பூசல் இருப்பது, ஊரறிந்த ரகசியம். உட்கட்சி பூசலால், கர்நாடக காங்கிரஸ் அரசு கவிழுமென, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறி இருந்தார்.
இதுகுறித்து, மைசூரு விமான நிலையத்தில், சித்தராமையா நேற்று கூறியதாவது:
லோக்சபா தேர்தல் போன்று, மேலவை தேர்தலையும் தீவிரமாக எடுத்துக் கொண்டு காங்கிரஸ் செயல்படுகிறது. மேலவை தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் காங்., வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியால் எந்த பின்னடைவும் எங்களுக்கு ஏற்படாது. ஆசிரியர்கள், பட்டதாரிகள் மிகவும் அறிவாளிகள். எது சரி, எது தவறு என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.
மத்திய, மாநில அரசு திட்டங்களை ஒப்பிடுவதற்கு அவர்களுக்கு தெரியும். மற்ற மாநிலங்களில் நடக்கும் லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு அழைப்பு வந்துள்ளது.
மஹாராஷ்டிரா முதல்வர், கர்நாடக அரசு கவிழும் என்று சொல்வதை விட்டு விட்டு, முதலில் பா.ஜ., உட்கட்சி பூசலை சரி செய்து கொள்ளட்டும். அவரது ஆட்சியை தக்கவைக்கட்டும். காங்கிரசில் உட்கட்சி பூசல் இல்லை. எங்களில் ஒற்றுமை இல்லை என்றால், லோக்சபா தேர்தலை எப்படி சந்தித்திருக்க முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
***

