ADDED : ஆக 10, 2024 11:23 PM
*வரி செலுத்தா நிறுவனங்கள்
ஏழைகளின் நடைபாதை கடைகளை அகற்றும் வேலையை முனிசி.,காரங்க நடத்தி முடிச்சிருக்காங்க. கேட்டால் மேலிட உத்தரவு என்கிறாங்க. இந்த சட்டம், திட்டம் எல்லாம் இது எத்தனை நாளைக்கோ.
வர்த்தக ரீதியாக இருக்கும் பல திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பெரிய கடைகள், கல்வி நிறுவனங்கள், வரி செலுத்தாமல் சொகுசாக இருப்பவங்களை ஒண்ணும் செய்ய முடியாமல் இருக்கிறாங்களே, இதன் பேரில் ஆக் ஷன் எதுவுமே இல்லையே. இதுக்கு மட்டும் முனிசி குறட்டை விடலாமா.
***
கிடப்பில் துாங்கும் தீர்ப்பு
தேசிய தலைநகரில் கோல்டு மைன்சின் போர்டு ஆப் டைரக்டர்கள் கூட்டம் நடந்திருக்குது. முன்னாள் தொழிலாளர்களுக்கு வட்டியுடன் நிலுவைத்தொகை வழங்க உத்தரவிட்ட ஹைகோர்ட் தீர்ப்பு பற்றியும் அலசினாங்களாம். ஆனால், எடுத்த முடிவை கசிய விடாமல் அமுக்கி வெச்சிருக்காங்க.
ஏற்கனவே, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கோல்டு உற்பத்திக்கு 'குளோபல் டெண்டர்' விட சொன்ன உத்தரவையே அமல் படுத்தாமல், கிடப்பில் போட்டு வெச்சிருக்காங்க.
அது போல, இந்த உத்தரவையும் ஆறப்போட்டு துாங்க விடுவாங்க போல் இருக்குது. தொழிலாளர் நிலுவைத் தொகை செட்டில்மென்ட் விரைந்து வழங்க இன்னொரு வழக்கை சுரங்க நிர்வாகம் எதிர்பாக்குது.
***
மீண்டும் வருமா அலுவலகம்!
பல ஆண்டுகளாக மூடி கிடந்த '563 120' பின் கோடு தபால் நிலையம் புதுப்பித்து திறந்து வெச்சிருக்காங்க. அதன் வழக்கமான சேவை நடக்குது.
தபால் நிலையத்தில் நடமாட்டமும் கூடியிருக்கு. இதே போல நலிவடைந்த கோரமண்டலையும் புதுப்பிக்க போறாங்களாம்.
ஆனால், கட்டடம் சீரில்லாமல் சிதிலமடைந்து, மூடப்பட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தை 35 கி.மீ., துார கோலாருக்கு இடமாற்றம் செய்து 10 வருஷம் கடந்து போனது. இந்த கட்டடத்தை புதுப்பிக்க யார் மனதில் ஈரம் இருக்குதோ.
பல கோடிகள் செலவிடுகிற ஸ்டேட் அரசு , சில லட்சங்களால் கோல்டு சிட்டி அலுவலகத்தை சீரமைக்க நல்ல காலம் எப்போ பிறக்கப் போகுதோ.
***
*பில்டப் ஏன்?
கோல்டு மைன்ஸ் நினைவுச்சின்னமாக திகழ வேண்டும்; வரலாறு மறையக் கூடாது என்பது தான் ஒட்டு மொத்த முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களோட வாரிசுகளின் விருப்பமாம்.
அதனால், மீண்டும் மைன்சை நடத்துறாங்களோ இல்லையோ, சுரங்கத்தின் அடையாள சின்னங்களை அழிக்காமல் பாதுக்க மத்திய, மாநில, அரசுகள் முன் வரவேண்டும் என்கிறாங்க.
அந்த வகையில், 'சயனைட்' மலையும் வியர்வையின் அடையாளம். இதனை உருக்குலைய செய்து அழிக்க கூடாதென விரும்புறாங்க.
திறந்த வெளியில் கொட்டி கிடக்கிற மலை மண்ணை ஒரு பிடியும் யாரும் எடுப்பதில்லை. சயனைட் மலைக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை.
ஆனால், சயனைடு மலை பேர் சொல்லி காவலுக்கு நூறு பேரை பணியமர்த்த போவதாக 'பில்டப்' கொடுக்குறாங்க. கோல்டன் சிட்டியே, பாதுகாப்பு வளையமாக பார்வைகள் இருப்பதை மறந்துட்டாங்களே.
***

