வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தம்; காங்., - எம்.எல்.ஏ., எச்சரிக்கை
வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தம்; காங்., - எம்.எல்.ஏ., எச்சரிக்கை
ADDED : ஏப் 01, 2024 11:48 PM

சிக்கபல்லாபூர் : ''பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டால், மாநிலத்தில் வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படும்,” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கு, அதிக தொகுதிகளை கைப்பற்ற, வாக்குறுதித் திட்டங்களை மட்டுமே, காங்கிரஸ் நம்பியுள்ளது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, அமைச்சர்கள், தலைவர்கள் இதே விஷயத்தை முன்வைத்து, பிரசாரம் செய்வதை காண முடிகிறது.
சமீபத்தில் மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, 'இம்முறை காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், வாக்குறுதித் திட்டங்களை தொடருவோம். தோல்வி அடைந்தால் நிறுத்துவோம்' என, கூறியிருந்தார்.
இதேபோல் சிக்கபல்லாபூரில், நேற்று அக்கட்சி எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் பேசுகையில், “லோக்சபா தேர்தலில், எந்த காரணத்தை கொண்டும் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாதீர்கள். ஒருவேளை போட்டால், மாநிலத்தில் வாக்குறுதித் திட்டங்கள் நிறுத்தப்படும். மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை என்றால், திட்டங்கள் செயல்படுத்தி என்ன பயன்? எனவே இவற்றை நிறுத்துவோம்,” என கூறினார்.
இது சர்ச்சைக்கு காரணமானது. மக்களை காங்கிரஸ் பிளாக்மெயில் செய்வதாக பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது.

