ADDED : மே 14, 2024 01:41 AM
பாட்னா, மே 14-
பீஹாரின் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.,வின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி, 72, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
கடந்த ஏழு மாதங்களாக புற்றுநோய்க்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்ததாக, பா.ஜ., சார்பில் நேற்றிரவு அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பீஹார் பா.ஜ., வெளியிட்ட பதிவில், 'சுஷில் குமார் மோடியின் மறைவுச் செய்தியால், பா.ஜ., குடும்பம் மிகவும் சோகத்தில் உள்ளது. ஒரு சிறந்த வீரரை இழந்துவிட்டோம். இந்த இழப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது' என, குறிப்பிட்டுள்ளது.
சுஷில் குமார், பீஹார் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர், மாநில நிதியமைச்சர், ராஜ்யசபா எம்.பி., உட்பட பல்வேறு பதவிகளை வகித்து உள்ளார்.
சுஷில் குமாரின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

