மகனே எங்கிருந்தாலும் 48 மணி நேரத்துக்குள் வா! பிரஜ்வல் சரணடைய குமாரசாமி 'கெடு'
மகனே எங்கிருந்தாலும் 48 மணி நேரத்துக்குள் வா! பிரஜ்வல் சரணடைய குமாரசாமி 'கெடு'
ADDED : மே 21, 2024 06:18 AM

பெங்களூரு: ''எங்கிருந்தாலும் 24 - 48 மணி நேரத்துக்குள் சிறப்பு விசாரணை குழுவிடம் சரணடைய வேண்டும்,'' என, ஹாசன் எம்.பி., பிரஜ்வலுக்கு, அவரது சித்தப்பாவும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி 'கெடு' விதித்துள்ளார்.
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள், கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தின. வீடியோக்கள் வெளியானதும், அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி, தலைமறைவாகிவிட்டார்.
இதுவரை எந்த நாட்டில் உள்ளார் என்றே தெரியவில்லை. அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. பிரஜ்வல் வெளிநாட்டுக்குச் சென்று, 25 நாட்கள் கடந்தும் நேற்று வரை, அவர் இந்தியாவுக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து, முன்னாள் முதல்வர் குமாரசாமி, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
கர்நாடக அரசுக்கு, பிரஜ்வலை வரவழைக்கும் சக்தி இல்லை என்று கருதுகிறேன். எனவே 'தேவகவுடாவுக்கும், எனக்கும், கட்சி தொண்டர்களுக்கும் மதிப்பு அளித்து, எங்கிருந்தாலும் திரும்பி வா' என ஊடகத்தினர் வாயிலாக பிரஜ்வலுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
அடுத்த 24 - 48 மணி நேரத்துக்குள் சிறப்பு விசாரணை குழுவிடம் சரணடைய வேண்டும். அவர்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள வேண்டும். என் தந்தையின் வலியை தாங்க முடியாமல், நான் பேசுகிறேன்.
எங்களை போல், வேறு யாருக்கும் இந்த சூழ்நிலை ஏற்பட கூடாது. என் பெற்றோருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்பட கூடாது என்று நான் தினமும் பத்மநாபநகருக்கு சென்று, அவர்களிடம் பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

