ADDED : ஏப் 29, 2024 06:43 AM

ஹூப்பள்ளி: ஷிகாவி சட்டசபை தொகுதியில் 'ரோடு ஷோ' நடத்திய பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷியின் வாகனத்தை இளைஞர்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தார்வாட் பா.ஜ., வேட்பாளராக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி போட்டியிடுகிறார். இவருக்கு ஆரம்பம் முதலே திங்களேஸ்வர சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். மூத்த மடாதிபதிகள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதால், வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
நேற்று முன்தினம் ஷிகாவி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வனஹள்ளி கிராமத்தில் ரோடு ஷோ நடத்தி பிரஹலாத் ஜோஷி பிரசாரம் செய்தார். அப்போது இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், வாகனத்தை நிறுத்தி, 'பல ஆண்டுகளாக தார்வாட் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக உள்ளீர்கள். எங்கள் கிராமத்துக்கு என்ன வளர்ச்சி பணிகள் செய்துள்ளீர்கள்' என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பிரஹலாத் ஜோஷி, 'ஜல் ஜீவன் திட்டத்துக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளேன்' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள், 'உங்களின் மானியம் எங்கிருந்து வந்தது. நீங்கள் யாரை வளர்த்தீர்கள்' என கூறி, எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.
ஆனாலும், பிரஹலாத் ஜோஷி தனது பிரசாரத்தை தொடர்ந்தார். பிரசாரத்துக்கு இடையூறாக இருந்தவர்களை, பா.ஜ.,வினர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று சமாதானப்படுத்தினர். இதனால், இக்கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷியின் பேச்சை நிறுத்த கூறிய வனஹள்ளி கிராம இளைஞர்கள். இடம்: ஹூப்பள்ளி, தார்வாட்.

