ADDED : ஏப் 20, 2024 12:49 AM
கோஹிமா,
கிழக்கு நாகாலாந்தை தனி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி, நாகாலாந்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், லோக்சபா தேர்தலை நேற்று புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கூட்டணி ஆட்சி
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, கிழக்கு பிராந்திய மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக சென்று சேர்வதில்லை என்றும், மேற்கு பகுதியில் வசிக்கும் மக்களுடன் ஒப்பிடுகையில், தாங்கள் பின்தங்கி இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு என்ற அமைப்பின் கீழ், ஆறு மாவட்டங்களின் பழங்குடி அமைப்பினர் மற்றும் முன்னணி இயக்கங்கள் ஒன்றிணைந்து, 15 ஆண்டுகளாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
போராட்டம்
கிழக்கு நாகாலாந்தின் மோன், துயென்சாங், லாங்லெங், கிபிர், நோக்லக் மற்றும் ஷமடோர் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாகாலாந்தில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. எனினும், தங்களின் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், ஒன்றிணைந்து இந்த தேர்தலை புறக்கணித்தனர்.
இதன் காரணமாக, இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் யாரும் ஓட்டளிக்கச் செல்லவில்லை. இதன் வாயிலாக தங்களின் கோரிக்கையை ஜனநாயக முறையில் நேற்று வலியுறுத்தியதாக கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

